கோவிட் 19 தடுப்பூசிகள் தவிர்க்க முடியாதவை!.. அறிவுறுத்தும் டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Subscribe to Oneindia Tamil

-பேராசிரியர் மருத்துவர் முத்துச் செல்லக் குமார்

சென்னை: கோவிட் 19 தடுப்பூசிகள் தவிர்க்க முடியாதவை என்று பேராசிரியர் மருத்துவர் முத்துச் செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக கட்டுரை பின்வருமாறு:

இயற்கை எதிர்ப்பாற்றலின் சாதகம்

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

இயற்கையாகவே கோவிட் தொற்று ஏற்பட்டு லேசான தொந்தரவுகளுடன் உடல் உறுப்புகளை பாதிக்காமல் நோய் குணமாகி விட்டால் பிரச்சனை இல்லை. இயற்கையாகவே ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்படும் போது, தீநுண்மிகள் உடலில் பெருகி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த உடலில் ஏற்படுகின்ற எதிர்ப்பாற்றலும் மிகையாக இருக்கும். (ஆனால், தொந்தரவு இல்லாதவர்களுக்கும்,தொந்தரவுகளை ஏற்படுத்தி பாதிப்பை உருவாக்கும் நபர்களுக்கும் இது சற்று மாறுபடும்).

இயற்கையாகவே கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு,
எதிர்ப்பாற்றல் புரதங்களோடு,செல்களின் எதிர்ப்பாற்றலும் ஏற்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் அது போல அமைவதில்லையே!யாரை பெரிதும் பாதிக்கும்,பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிய நோயாளியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

இயற்கை எதிர்ப்பாற்றலின் பாதகம்

ஒருவருக்கு இயற்கையாகவே தொற்று ஏற்படும் போது, அவருக்கு அந்த வைரஸ் நோயும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளும் ஏற்படும். இதனால் அவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். நோயின் தன்மை தீவிரமாகும் போது அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, கண்காணித்து, சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். இப்படி சிகிச்சை செய்யப்படுபவர்கள் இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. கோவிட் ஏற்பட்டு உலக அளவில் தீவிர சிகிச்சை பலனில்லாமல் இறந்தவர்கள் 1.6 மில்லியன் மக்கள்! அதாவது, 16 லட்சம் பேர். அமெரிக்காவில் மட்டுமே 3 லட்சம் பேர்கள் இறந்துள்ளார்கள். இந்தியாவில் மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 1.44 லட்சம் பேர்!

இதில் பெரும்பாலானோர் முதியவர்கள், பல்வேறு நோய்களை கொண்டவர்கள், ஆண்கள் என்றாலும், பெண்களும், இளம் வயதினரும், சிறுவர்களும், எந்தவித நோயும் இல்லாமலும் ஆரோக்கியமாக இருந்தவர்களும் இறந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதுவரை 97% பேர் அவர்களின் உடல் எதிர்ப்பாற்றலால் நோயிலிருந்து குணமாகி இருக்க ,3% மக்களை அவர்களின் உடல் எதிர்ப்பாற்றலால் குணப்படுத்த முடியவில்லை.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

ஆக, சிறுவயது முதல் முதியவர் வரை பாதித்து இதுவரை 16 லட்சத்திற்கு அதிகமானவர்களை இறக்கச் செய்த கோவிட் நோய்,100 வயதைக் கடந்த பலரையும் இறப்பிலிருந்து விடுவித்தது எப்படி? எந்த நோயுமில்லாத,ஆரோக்கியமான 20-30 வயது இளைஞர்களை இறக்கச் செய்த நோய் 100 வயதுடன் பல்வேறு நீண்ட கால நோய்கள் உள்ளவர்களை மட்டும் எப்படிக் காப்பாற்றியது? இந்த இளைஞர்களுக்கு இல்லாத எதிர்ப்பாற்றலா 100 வயதுடன் பல்வேறு நீண்ட கால நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்பட்டது?

ஆகவே,வயதும்,உடனிருக்கும் நோய்கள் மட்டுமல்ல,மரபணு தொடங்கி இன்னும் இனம் புரியாத பல்வேறு கண்டறியப்படாத காரணங்கள் நோயின் தீவிரத் தன்மைக்கும்,இறப்பிற்கும் காரணமாக இருக்கலாம். ஆகவே,கோவிட் வைரஸ் வந்தால் தானே சரியாகிவிடும்,உடல் எதிர்ப்பாற்றலைத்தரும் உணவுகள்,மருந்துகள் ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமென இருக்க முடியாது,ஏனென்றால்,இறந்தவர்கள் அதையெல்லாம் இளைஞராக இருந்த போதும் செய்தவர்கள் தான்!

ஆகவே இயற்கை எதிர்ப்பாற்றலை மட்டும் நம்பினால் இழப்புகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, ஏதோ தொற்று வந்தது சரியாகி விட்டது என்று இவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏனெனில், இவர்களது ரத்தத்தில் உருவான எதிர்ப்பாற்றல் புரதங்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துக் கொண்டு வந்து 3 மாதத்திலேயே, மாதக் கடைசியில் கையில் காலியான பணம் போல ஆகிவிடுகின்றன.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

இதன் காரணமாக இவர்களுக்கு மீண்டும் தொற்று (Reinfection) ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு திரும்பிய பலரும் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். நரம்பு பாதிப்பு, பக்கவாதம், இதய பாதிப்பு (ரத்த நாள அடைப்பால்) தொடர் அசதி, உடல் வலிகள், தலைவலி, தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம் என பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். (LONG COVID) இவர்களை சிகிச்சை செய்ய அரசாங்க மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகள் கூட செயல்படத் தொடங்கிவிட்டன.

செயற்கை எதிர்ப்பாற்றல்

செயற்கையாக ஒருவருக்கு இந்த வைரஸின் சிறு பகுதியை பிரித்தெடுத்து தடுப்பூசி தயாரித்து மனித உடலில் செலுத்துகின்ற போது ஏற்படும் எதிர்ப்பாற்றல் குறைவாகவே இருக்கும். இது இயற்கைத் தொற்றுக்கு பொதுவாக ஒப்பாகாது.

பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ எனப்படும் மூலக்கூறு, வைரஸ் துகள்கள், ஸ்பைக் புரதம், (இதனைச் செலுத்த உள்ளடக்கிய செயலிழக்கப்பட்ட வீரியமில்லாத சிம்பன்சி/ மனித குளிர் வைரஸ் பயன்படுகிறது) கொல்லப்பட்ட கோவிட்டின் பகுதி என எது என்றாலும் இவை ஒரு வகையில் பார்த்தால் இயற்கையானவை தான்.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

இவற்றை மனித உடலுக்குள் செலுத்திய பிறகு ஏற்படும் தடுப்பாற்றலும்,இயற்கையான வைரஸின் பகுதியை கருத்தில் கொண்டு தான் உருவாகிறது. எனவே,இது கூட இயற்கையானது தான்.

ஆனால், இவற்றை நாம் தயாரித்து பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்க பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் தான் செயற்கை. (Stabilizers ,Preservatives) இவற்றின் உதவியுடன், தடுப்பூசிகளை உடலில் செலுத்துவதும் நோய் வராமலே தடுப்பதும் செயற்கையானது தான்!

செயற்கை எதிர்ப்பாற்றலின் சாதகம்

செயற்கையாக, வைரஸின் பகுதியை பயன்படுத்தி தடுப்பூசி தயாரித்து செலுத்துவதனால்,நோயாளிக்கு கோவிட் நோய் கண்டிப்பாக ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால் வைரஸை இறக்கச்செய்து,அதை செயலிழக்கச் செய்து,அதன் சிறு பகுதியை உடலில் செலுத்துவதால் அந்த நபருக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கோவிட் வர வாய்ப்பில்லை. (தடுப்பூசியால்) அதே போல, எதிர்ப்பாற்றல் உருவாகி விட்டால்,நோய்த் தொற்று ஏற்பட்டவரிடமிருந்து கோவிட் அவருக்கு பரவுவதற்கும் வாய்ப்பில்லை.

இவர்களுக்கு எதிர்ப்பாற்றல் புரதங்களோடு (Neutralizing antibodies.),செல்களின் எதிர்ப்பாற்றலும் (Cellular immunity) ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

சில தடுப்பூசிகள்,இயற்கையாக உடல் தரும் தடுப்பாற்றலை விட சிறப்பான தடுப்பாற்றலைத் தருவதுடன்,சில உடல் நோய்களும்,பாதிப்புகளும் ஏற்படாமல் கூடத் தடுக்கின்றன. உதாரணத்திற்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV- Human papilloma virus) தொற்று ஏற்பட்டால் அது உடலில் எதிர்ப்பாற்றலைத் தோற்றுவித்தாலும்,பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில்லை (Cervical Cancer). ஆனால் ஆரம்பத்திலேயே இதற்காக போடப்படும் தடுப்பூசி, பெண்களுக்கு ஏற்படும் மேற்கூறிய புற்றுநோயைத் தடுத்துவிடுகிறது. இதே போன்றே, டெட்டனஸ் தடுப்பூசி,நிமோனியா தடுப்பூசி,மஞ்சள்காமாலை -கல்லீரல்-பி வைரஸ் தடுப்பூசி,ஆகியவை இவற்றை முறையாக போட்டுக் கொள்ளும் போது இந்த நோய்கள் வராமலேயே தடுத்துவிடுகிறது.

அதே நேரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு, இந்த நுண்கிருமிகளாலும், வைரஸாலும் உடல் பாதிப்பு தான் அதிகமாக இருக்கும். உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தி விடும். இந்தக் கிருமிகளால் உடலில் ஏற்படும் இயற்கையான எதிர்ப்பாற்றல் பெரிதாக நோயைக் கட்டுப்படுத்துவது இல்லை.
தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள் 60%(Bharat Biotech-Covaxin)70%,(Oxford/AstraZeneca) 91.4%(Sputnik V vaccine) 94.5% (Moderna,),95% (Pfizer's vaccine) எதிர்ப்பாற்றலைத் தருகிறது என்று அறிவித்துள்ளார்கள். இது வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாதுகாப்பானதாக உள்ளது என்றும் அறிவித்துள்ளார்கள்.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

செயற்கை எதிர்ப்பாற்றலின் பாதகம்

ஊசி போடுவது என்றாலே பலருக்கும் பயம் தான்!

தடுப்பூசியால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

இதன் பின் விளைவுகள் என்ன? பாதிப்புகள் என்ன? என்ற பயம்.

இதில் இது வேறு, கோவிட் புதிய வைரஸ்!

உருவாக்கப்பட்ட தடுப்பூசியும் புதிதானது. இதனால் இதனைக் குறித்து பயம் மக்களிடம் ஏற்படுவது இயற்கையான,இயல்பான ஒன்று தான்!

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

இவற்றால், மனித உடலில் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகிறது என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. இனி வரும் காலங்கள் தான் அது குறித்த தெளிவைத் தரும்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு,உடலில் எதிர்ப்பாற்றல் புரதங்கள் குறையும் போது மீண்டும் தொற்று ஏற்படுமா என்பதும் இன்னும் தெரியவில்லை. ஏற்பட்ட செல்களின் எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலம் கோவிட்-19 வராமல் தடுக்கும்? என்பதும் புரியவில்லை.

ஏன் தடுப்பூசிகள் தவிர்க்க முடியாதவை ?

மனிதன் என்பவன் யார்?
இயற்கையின் படைப்பு.
கோவிட் போன்ற வைரஸ்கள்?
அவையும் இயற்கையானது
மனிதர்களுக்கு ஏற்படும் கொரோனா நோய்களும் இயற்கையான நிகழ்வு தான்!
(சீனா மீது சந்தேகக் கண் இருந்த போதும்!)
எப்படி மனிதன் பல்வேறு உயிரினங்களையும் தன் வாழ்விற்காக சார்ந்து இருக்கிறானோ அதே போன்றே, உலகத்தில் தோன்றிய பல்வேறு உயிரினங்களும் மனிதனைச் சார்ந்து இருக்கின்றன.கோவிட்19 வைரஸ் உட்பட!

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

ஆனால் அதற்காக, மனிதனால் முழுமையாக இயற்கையோடு இயைந்து வாழ முடியாது. அவனுடைய தனிப்பட்ட உயிரியல்- உயரியல் குணத்தால் இயற்கையின் விதிகளைக் கூட, அவனது வசதிக்காக கொஞ்சம் மாற்றி அமைப்பான். புவியீர்ப்பு விசை இயற்கையானது. ஆனால்,நிலவை கவிஞர்கள் வர்ணித்துக் கொண்டே இருக்க, புவியீர்ப்புவிசையை மீறி பூமியை விட்டு, விண் நோக்கிச் செல்ல ஒரு யுக்தியை கண்டுபிடித்தான். விண்கலத்தை உருவாக்கி ...

விண்வெளிக்குச் சென்று விந்தைகள் புரிந்தான் !

இன்று, இரவு நேரத்தில், ஒரு தொலைக்காட்சியில் அமர்ந்து
இயற்கை வைத்தியம் குறித்து பேச இயற்கை விதியை வென்ற செயற்கைக்கோள் தானே உதவிக் கொண்டிருக்கிறது!

இதை யாரும் மறக்க முடியுமா?

உடல் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்ததால் மட்டும்,கோவிட் வைரஸால் மக்கள் இறக்கவில்லை. உண்மையில்,அது தேவையான அளவு சீராக இருந்து உடலைக் காக்காத காரணத்தாலும்.அதன் வெளிப்பாடு மிகையாக இருந்து, உடலைப் பாதித்ததாலுமே என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்தப் பாதிப்பு ஏற்பட நீண்ட கால உடல் நோய்கள் (comorbidities) ஒத்துழைத்தன.

வைரஸ் நோய் வந்தால் என்ன, உடல் எதிர்ப்பாற்றல் பார்த்துக்கொள்ளும் என்று அலட்சியமாக இனியும் இருக்காதீர்கள்.

 Dr Muthu Chellakumar says that Covid 19 vaccine cannot be avoided

கோவிட் வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பரிசோதனை செய்து உறுதி செய்து, சிகிச்சை செய்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி ,பரிசோதனை செய்து உறுதி செய்து,அவர்களுக்கும் சிகிச்சை செய்து என உலகமே லாக்டவுனை கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்து, முகக்கவசம், சமூக இடைவெளி, கை சுத்தம் செய்தல் என அங்கலாய்த்து, முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும், கைப்பேசி தொடங்கி கைலாசம் வரை, மக்களைத் தயார்படுத்தியும் கூட,16 லட்சம் மனித உயிர்களை கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் இழந்திருக்கிறோம் என்றால்... கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் என்ன ஆகி இருக்குமென எண்ணிப் பாருங்கள்
எனவே அரசாங்கம் அறிவிக்கும் தடுப்பூசியை மக்கள், குறிப்பாக தொற்று ஏற்படாதவர்கள், முதியவர்கள், பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். தடுப்பூசிகள் தவிர்க்க முடியாதவை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+