Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அப்பா பேசலியே".. மக்கள் இதயங்களை வென்ற வாடாத "தாமரை" தமிழிசை சவுந்தராஜன்.. ஹேப்பி பர்த்டே "அக்கா"

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கு இன்று பிறந்தநாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலின் மூத்த தலைவரும், முன்னாள் பாஜக மாநில தலைவரும், தெலுங்கானா ஆளுநருமான, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று பிறந்த நாள்..!
"ஒன் இந்தியா"வில், 2 வருடங்களுக்கு முன்பு, "தமிழிசை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன" என்று ஒரு கேள்வியை நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு "வெள்ளந்தி சிரிப்பு", போர்க்குணம், சவால்களை சமாளிப்பது, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், போன்ற ஆப்ஷன்களையும் தந்திருந்தோம்.

 வெள்ளந்தி சிரிப்பு

வெள்ளந்தி சிரிப்பு

இதில், வெள்ளந்தி சிரிப்பு என்ற ஆப்ஷனுக்கு 22.52 சதவீதம் வாசகர்கள் வாக்களித்திருந்தனர்.. ஒரு அரசியல் கட்சி தலைவரின், அதிலும் தமிழகத்தில் அவ்வளவாக செல்வாக்கு இல்லாத ஒரு கட்சி தலைவரின் சிரிப்பினைகூட, மக்கள் கவனிக்க தவறவில்லை என்பதும், அந்த சிரிப்புக்கு பின்னால் எந்தவித ஒளிவுமறைவு இல்லை என்பதும் தமிழிசை மூலம் அன்றைய தினம் மீண்டும் நிரூபணமானது.

வாஜ்பாய்

வாஜ்பாய்

தமிழிசையை பொறுத்தவரை கிட்டத்தட்ட வாஜ்பாய் போலத்தான்.. பாஜக தலைமையின் மக்கள் விரோத அறிவிப்புகளுக்கு தமிழிசை இங்கு தலைவராக இருந்தவரை, பெரிய அளவிலான தன்னுடைய எதிர்ப்பினை காட்டவே இல்லை என்பதுடன், மக்கள் பக்கம் வலுவாக நிற்காததும், எந்தவிதத்திலும் பாஜக தலைமையை பகைத்து கொள்ளாத போக்கும்தான் அவர் மீதான தமிழக மக்களின் வருத்தமாக படிந்துவிட்டது. மற்றபடி, தமிழிசை போன்ற ஒரு விசுவாசம், உண்மை, கண்ணியம் மிக்க தலைவர் இந்த கால அரசியலில் கிடைப்பதும் நாம் கண்ணால் காண்பதும் அரியதுதான்.

 டாக்டர் தமிழிசை

டாக்டர் தமிழிசை

ஒருமுறை ஸ்கூலில், "நீ பெரியவளானதும் என்னவாக போறே?" என்று ஒரு டீச்சர் கேட்டதும், கண்ணை மூடிக்கொண்டு படக்கென்று "எம்எல்ஏ" என்று சொன்னாராம் தமிழிசை.. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் இதை சொன்னதும், மகளை சரமாரியாக திட்டிவிட்டாராம்.. "ஏன் இப்படி சொல்றே.. அப்படியெல்லாம் சொல்லாதே.. யாராவது பெரியவள் ஆனதும் என்னவா ஆகப்போறேன்னு கேட்டால், டாக்டர் ஆக போறேன்னு சொல்லணும்" என்று அப்போதே தன் கனவை மகள் மீது பதித்தவர்.

 அப்பா பேசலையே..!

அப்பா பேசலையே..!

அம்மாவின் ஆசைப்படியே டாக்டர் ஆகிவிட்டாலும், தன் ஆசைப்படியே அரசியலுக்குள்ளும் கால்பதித்தார் தமிழிசை. தன்னுடைய அப்பாவின் பேச்சால் எவ்வளவு மயங்கி விழுந்தாரோ, அதே அளவுக்கு ஈர்ப்பு வாஜ்பாய் பக்கமும் தன்னையும் அறியாமல் தமிழிசைக்கு ஏற்பட்டுவிட்டது.. அது பாஜகவில் தன்னை முழுமூச்சாக இழைத்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது.

 அதிகப்பிரசங்கித்தனம்

அதிகப்பிரசங்கித்தனம்

"அதிகப்பிரசங்கித்தனம் எதுக்கு" என்ற அப்பாவின் கோபத்துக்கு 6 மாச காலம் ஆளானதையும், அப்பா பேசலையே என்று மனம் நொந்து போனதையும் தமிழிசை எளிதில் மறந்துவிடவில்லை.. 1996-ல் "பாப்பாவை அரசியலுக்கு கூட்டிட்டு வந்துடுங்கன்னு" மூத்த தலைவர் யசோதா, குமரி அனந்தனிடம் சொல்லவும் கொந்தளித்துவிட்டார் குமரி அனந்தன். "அதெப்படி? "நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது, எனக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, அதனால என் பொண்ணை வாரிசாக கொண்டு வர மாட்டேன்" என்று சீறிய அப்பாவின் கொள்கையை, தன் பிடிவாதத்தால் வென்றார்.

அவமானங்கள்

அவமானங்கள்

ஆனால், சொந்த குடும்பத்தைவிட, சொந்த கட்சியில்தான் நிறைய அவமானங்களை ஆரம்பத்தில் தமிழிசை சந்திக்க வேண்டி இருந்தது.. பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த இந்த "தமிழ் மகளை" பலரது குழம்பிய கேள்விகள் வட்டமடித்தன.. இவர் ஏன் இங்கே வந்தார்? ஏதோ உள்நோக்கம் இருக்குமோ? என்ற சந்தேகக் கண்களுக்கும், சர்ச்சை பேச்சுக்களுக்கும், அமைதியை தவிர வேறெதையும் பதிலாக தரவில்லை தமிழிசை.. அப்போதும் சரி, இப்போதும் சரி.. விமர்சனங்களை தாங்கி கொள்ள பழகி கொண்டார்.

 குமரியார் மகள்

குமரியார் மகள்

சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கருத்தியல் ரீதியாக முரண்படுவதால்தான், கல்லடிகளும், சொல்லடிகளும் இன்றுவரை தமிழிசை மீது விழுந்து கொண்டுதான் இருக்கிறது.. எனினும், தடித்த வார்த்தைகளை யார் மீதும் பயன்படுத்தியது இல்லை.. இதைதான் மறைந்த முதல்வர் கருணாநிதி அடிக்கடி சொல்வார், "குமரியார் மகளிடம் நாகரீக பேச்சு எப்போதுமே இருக்கும்" என்று மேடையிலேயே பலமுறை சொன்னதை மறுக்க முடியாது.. ஒரு மாவட்ட தலைவர் என்ன சொன்னாலும் சரி, அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார், அன்றே புகழ்பெற்ற டாக்டராக உயர்ந்திருந்த தமிழிசை...

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

இதை குமரியாரும் பலமுறை கவனித்து மனதுக்குள் வருத்தப்பட்டுள்ளார்.. தமிழிசையின் விசுவாசத்தை மேலிடம் அறிய 15 வருடங்கள் ஆயிற்றோ என்னவோ.. அதன்பிறகுதான் மாநில தலைவர் பதவி தேடி வந்தது.. பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் அதல பாதாளத்தில் தொங்கி துவண்டு போய்க் கிடந்ததை, தன் தோள் மீது எடுத்து சுமக்க ஆரம்பித்தார் தமிழிசை.. அதேசமயம், ஆர்எஸ்எஸ் என்ற பிடிக்குள் சிக்கி கொள்ளாமல், தன்னையும் தற்காத்து, கண்ணியத்தையும் இழக்காமல், கட்சிக்கும் பங்கம் வராமல் சரியான நேர்க்கோட்டு விகிதத்தில் பயணிக்க தமிழிசையால் மட்டுமே முடிந்தது.

 கருவில் குழந்தைகள்

கருவில் குழந்தைகள்

இவர் ஒரு சாதாரண டாக்டர் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்தவர்தான் தமிழிசை.. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினைதான் இவர் தேர்ந்தெடுத்து படித்தவர்... மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராகவும் வேலை பார்த்தவர். ஆனால், இந்த திறமையை அறியாமல், தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சோஷியல் மீடியாவில் பலர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்த அறிவிலிகளை நாம் கடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை..

 நடிகர் கிண்டல்

நடிகர் கிண்டல்

"அந்த அம்மாவுக்கு யாராவது 5 ரூபாய்க்கு சீப்பு இருந்தால் வாங்கி தாங்கப்பா.." என்று பிரபல நடிகரும், பேச்சாளருமான ஒருவர் கேலியும் செய்தார் என்றால், அதையும் சிரித்தவாறே தாங்கி சென்றார் தமிழிசை. "என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்?" என்று தமிழிசை அன்று கேட்ட கேள்விக்கு இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

 உருவ கேலி

உருவ கேலி

ஒருவரின் உருவத்தை விமர்சிப்பது நாகரீகம் அல்லதான்... அப்படி விமர்சிப்பது தவறும்கூட... ஆனால் ஒரு பெண் என்றும் பாராமல், மருத்துவர் என்றும் பாராமல், குடும்ப பிண்ணனியையும் யோசிக்காமல், கட்சியின் மாநில தலைவி என்ற பொறுப்பையும் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட தாக்குதலை தமிழிசை மீது தொடுக்க, அவர் சார்ந்துள்ள கட்சியும், அதற்கு வக்காலத்து வாங்கும் போக்கும்தானே தவிர, தமிழிசை மீதான தனிப்பட்ட கோப, தாபங்கள் இல்லை என்பதே உண்மை!

பாஜக

பாஜக

இந்த தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்ததோ இல்லையோ.. அல்லது மலர போகிறதோ இல்லையோ.. கிட்டத்தட்ட தாமரையை மலர வைத்துவிட்டது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது தமிழிசைதான்.. கட்சிக்கும் அப்பாற்பட்டு இன்றும் நேசிக்கப்படுகிறார்.. அதனால்தான், இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின், "என் அன்புக்குரிய தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

"அக்கா"

அவரை தமிழக மக்கள் மறக்கவில்லை.. மறக்கவும் முடியாது.. எத்தனையோ பட்டங்களும், விருதுகளும் தமிழிசைக்கு கிடைத்திருந்தாலும் "அக்கா" என்ற பாசமிகு அடைமொழியை தமிழிசை தவிர வேறு யாருக்குமே நம் மக்கள் தந்தது கிடையாது.. இனியும் தர மாட்டார்கள்.. இன்று அவரது பிறந்தநாள்.. நீண்ட ஆயுடளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ வேண்டும் என்று, ஒன் இந்தியா சார்பில் எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.. Happy Birthday Madam..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+