காங்கிரஸுக்குள் பாஜக மதவாத சிந்தனை கர்த்தாக்கள்..திமுக ஓங்கி குட்ட நினைப்பதை கொட்டுகிறாரா கி.வீரமணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக மதவாத சிந்தனை கர்தாக்கள் இருக்கின்றனர்; அவர்களை களையெடுக்க வேண்டியது அவசியம் என தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சித்து அறிவுறுத்தி உள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை முன்வைத்து கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் பி.ஜே.பி.க்குச் சாதகமாகவும், காங்கிரசுக்குப் பாடமாகவும் அமைந்துவிட்டன. தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி என்பது புதிய வரவாகும். அங்கு பி.ஜே.பி. ஒற்றை இலக்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுருக்கமாகச் சொல்லப் போனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பி.ஜே.பி.,க்குச் சாதகமான சூழல் தொடர்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தென் மாநிலங்கள் பி.ஜே.பி. காலூன்ற முடியாத பகுதிகளாக அமைந்திருப்பது எதைக் காட்டுகிறது?

Dravidar Kazhagam slams DMK Alliance Party Congress for soft Hindutva approach

தென் மாநிலங்கள்: தென் மாநிலங்கள் என்பவை சமூகநீதி என்ற தத்துவம் ஆழப் பதிந்திருக்கும் பகுதியாகும். சமூகநீதியா? மதவாதமா? என்ற வினாவை எழுப்பினால், இந்தப் பகுதியில் சமூகநீதிதான் மேலோங்கி நிற்கிறது. ஹிந்தி மாநிலங்களைப் பொறுத்தவரையில் மதவாதம் பல ஆண்டுகாலமாக வேரூன்றி நிற்கக் கூடியதாகும். மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை செயல்படுத்திய வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அடுத்த தேர்தலில் தோற்றதும், 450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் இடித்துத் தூள் தூளாக்கிய பி.ஜே.பி. வெற்றி பெற்று ஒன்றிய ஆட்சியைப் பிடித்தது அதைத்தானே காட்டுகிறது?

குஜராத் படுகொலைகள்: குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது யார் தலைமையிலான ஆட்சியில்? நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த பி.ஜே.பி. ஆட்சியில்தானே அந்தக் கொடூரம் - வன்மம் நடந்தது. அப்போது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேய் அவர்களே கூட ராஜதர்மம் காப்பாற்றப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டி சொல்லவில்லையா? அந்த மோடி தான் இன்றைய இந்தியப் பிரதமர் என்பதை எண்ணிப் பார்த்தால் மத அடிப்படை வாதம் வட மாநிலங்களில் தலைதூக்கி நிற்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!

ராகுலின் சமூக நீதி குரல்: தெற்கில் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் ஒரு நூற்றாண்டுக்காலம் செய்த பிரச்சாரத்தாலும், களப் பணிகளாலும், போராட்டங்களினாலும் சமூகநீதிக்கு முன், மதவாதம் மண்டியிட்டது என்பது வரலாற்று விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் எடை போட்டுப் பார்க்கத் தகுந்ததாகும். அண்மைக்காலத்தில்தான் காங்கிரசின் இளந்தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள முதன்மையான பிரச்சினை சமூகநீதியாகும். ஓ.பி.சி. மக்கள் மத்தியில், சமூகநீதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். 90 ஒன்றிய அரசு செயலாளர்களுள் ஓ.பி.சி.யினர் வெறும் மூன்று பேர்தான் என்ற உண்மை நிலையைப் பேச ஆரம்பித்துள்ளார். குமரிமுதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட நடைபயணத்தில், அவர் எழுப்பிய சமூகநீதிக் குரல் இப்பொழுதுதான் வட மாநிலங்களை எட்டத் தொடங்கியுள்ளது.
ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யின் தத்துவம் வெறும் மதவாதம்தான் - அவர்களின் ஒரே சித்தாந்தம் ஹிந்துத்துவா என்ற மதவாதம்தான். சிறுபான்மையினர்தான் நமது எதிரி என்று காட்டி, பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் பிரித்தாளும் யுக்திதான் பி.ஜே.பி. - சங் பரிவார்களின் சிந்தனையும், போக்குமாகும். மதக்கலவரங்களைத் தூண்டுவது - நடத்துவது அவர்களின் யுக்தி! 'அந்த நெருப்பு' அணையாமல் பார்த்துக் கொள்ள ஆங்காங்கே மதக்கலவரங்களைத் தூண்டுவது - நடத்துவது அவர்களின் அணுகுமுறையாகும். பெரும்பான்மை ஹிந்துவாதம் என்பது தேவைக்கும், பேச்சுக்கும், ஏமாற்றுதலுக்கும்தானே ஒழிய, காரியத்தில் அந்தப் பெரும்பான்மை மக்களின் முக்கியமாக அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் பட்டை நாமம்தானே, பி.ஜே.பி. ஆட்சியில்! இதனையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் புரிய வைக்கவேண்டியது மிகமிக முக்கியமும், அவசியமுமாகும். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஹிந்து முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன்தான் இதுகாறும் வாழ்ந்து வந்தனர். அதனை உடைக்க மதவாதப் பிரச்சினையை ஏற்படுத்தி, ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர்.

மிதவாத ஹிந்துத்துவா: காங்கிரஸ் தோற்று இருக்கலாம்; இப்பொழுது அது தன் கையில் எடுத்துள்ள சமூகநீதியும், மதச்சார்பின்மையும்தான் மக்களின் சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்துக்கும், இயல்பு வாழ்வுக்கும் உரியதாகும். அரசமைப்புச் சட்டப்படியானதாகும். இதற்கு மாறான சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பி.ஜே.பி.யின் நடவடிக்கை என்பது மக்களைப் பிரித்தாளும் பிற்போக்குத்தன்மை கொண்டது; சமூகநீதிக்கு ஆழக் குழிபறிப்பதும் ஆகும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமானதமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச்சினையை முன்வைத்து வெற்றி பெற்றவர்களின் தேர்தல் செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பி.ஜே.பி.யின் வெற்றி கேள்விக்குரியதே! வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் தேர்தல் வெற்றித் தோல்வியை மதிப்பிட முடியாது. மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட காரணத்தால் பி.ஜே.பி. வெற்றி பெற்றுவிட்டது; எனவே, நாமும் அதனைக் கையில் எடுத்தால் என்ன என்று குறுக்குவழியில் சிந்திக்கக் கூடாது. சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கொள்கையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவேண்டும்!

காங்கிரஸில் மதவாத கர்த்தாக்கள்: தொடக்கத் தோல்வியாக இருந்தாலும், காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கொள்கைகளை நாடு தழுவிய அளவில் அடிமட்டத்துக்கும் கொண்டு சென்று மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சகோதரத்துவம் வேண்டுமா? சக மனிதனோடு நாளும் சண்டை போடும் மதவாதம் வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பிட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்லவேண்டும். காங்கிரசுக்குள்ளும் பி.ஜே.பி.யின் மதவாத சிந்தனைக் கர்த்தாக்கள் இருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. அத்தகையவர்களைக் களையெடுத்து மாநில அளவிலும், இந்திய ஒன்றிய அளவிலும் இள ரத்தம் பாய்ச்சப்படவேண்டும். ராஜஸ்தானும், மத்திய பிரதேசமும் தரும் இந்தப் பாடத்தைக் காங்கிரஸ் அய்யந்திரிபறக் கற்றுக்கொள்ளவேண்டும். கட்சியில் உண்மை உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்! கட்சியில் உண்மை உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்; வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தித்து உண்மைகளைத் தக்க வகையில் புரிய வைக்கும் வகையில், தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கப்படவேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல - இந்தக் களப்பணி எப்பொழுதுமே அவசியமாகும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+