டிரைவரே இல்லாமல் ஓடும் சென்னை மெட்ரோ! 900 பேர் பயணிக்கலாம்.. 96 புதிய பெட்டிகள் எப்போது வரும்?
சென்னை: சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது... ஆமாம், ரெயிலை இயக்க டிரைவரே இல்லாமல், தானாகவே இயங்கும் ஆட்டோமெட்டிக் மெட்ரோ ரெயில்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதற்காக 96 புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை ஆந்திர மாநிலத்தில் தொடங்கியுள்ளது அல்ஸ்டாம் நிறுவனம். இந்த ரெயில்களில் அப்படி என்ன சிறப்பு? எப்போது சென்னைக்கு வரும்? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்...!!
சென்னை மெட்ரோவின் 2-ம் கட்ட திட்டம் மொத்தம் 119 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 3 முக்கிய வழித்தடங்களும், அவற்றை இணைக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த திட்டத்துக்கு தேவையான மெட்ரோ ரெயில்களை தயாரிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்ஸ்டாம் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

96 பெட்டிகள்.. 32 புதிய ரெயில்கள்
இதன்படி, மொத்தம் 96 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரெயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். அந்த வகையில் 32 புதிய மெட்ரோ ரெயில்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான தயாரிப்புப் பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள அல்ஸ்டாம் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ரெயில்கள் டிரைவர் இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. Grade of Automation 4 (GoA4) என்ற டெக்னாலஜி இதில் பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில்கள் செல்லும்.
ஒரு ரெயிலில் 900 பேர் பயணிக்கலாம்
இந்த புதிய மெட்ரோ ரெயிலில் ஒரே நேரத்தில் சுமார் 900 பேர் வரை பயணிக்க முடியும். பயணிகளின் வசதிக்காக ஏசி வசதி, சிசிடிவி கேமராக்கள், ரெயில் செல்லும் வழித்தடம் மற்றும் அடுத்த ஸ்டேஷன் குறித்த தகவல்களைக் காட்டும் டிஸ்ப்ளே என ஏகப்பட்ட விஷயங்கள் இதில் இடம்பெறுகின்றன.
பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி வசதிகள் இருக்கும்... நீண்ட நேரம் நின்று பயணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் பெர்ச் சீட்களும் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், ரெயில் பிரேக் போடும்போது உருவாகும் ஆற்றலை மீண்டும் மின்சாரமாக பயன்படுத்தும் Regenerative Braking தொழில்நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. இதனால் மின்சார பயன்பாட்டைக் குறைக்க முடியும்.
எப்போது சென்னைக்கு மெட்ரோ வரும்?
இந்த ரெயில்கள் எப்போது தயாராகி சென்னைக்கு வரும் என்பதுதான் பயணிகளின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, முதல் ரெயில் 2027 பிப்ரவரி மாதத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் ரெயில்கள் 2027 செப்டம்பர் முதல் 2028 மே மாதம் வரை படிப்படியாக வழங்கப்படுமாம்.
ஆனால், ரெயில்கள் வந்தவுடன் உடனடியாக பயணிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடாது... ஒவ்வொரு ரெயிலும் சென்னை மெட்ரோவின் சோதனை வசதிகளில் பரிசோதிக்கப்படும். மற்ற மெட்ரோ கட்டமைப்புகளுடன் இணைத்தும் சோதனை நடத்தப்படும்... இந்த சோதனைகளை செய்யவும், சேவைப் பரிசோதனைகளுக்காகவும், 14 மாத காலம் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1538 கோடி திட்டம்
இந்த 96 ரெயில் பெட்டிகளுக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,538.35 கோடி. இதில் ரெயில்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, சோதனை, பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும். அதுமட்டுமல்ல, கியாரண்டி காலம் முடிந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளையும் அல்ஸ்டாம் நிறுவனம் மேற்கொள்ளும்.
இந்த ரெயில்கள் பெங்களூருவில் உள்ள அல்ஸ்டாம் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, வெளிநாட்டில் இருந்து ரெயில்களை இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் செயல்படுத்தப்படுவதுதான், இந்த திட்டத்தின் ஹைலைட்டே.
ஏற்கனவே சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் 4-வது வழித்தடத்துக்காக 108 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இப்போது தொடங்கியுள்ள 96 பெட்டிகளின் தயாரிப்புப் பணியும் நிறைவடைந்தால், சென்னை மெட்ரோவின் தானியங்கி ரெயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான அடுத்தகட்ட முன்னேற்றமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... செமல்ல..!!!


Click it and Unblock the Notifications
