"என்னை தவெகவில் இணையச் சொன்னதே தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுதீர் தான்" - அனிதா ராதாகிருஷ்ணன் பரபர
தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி தூத்துக்குடி மாவட்ட புறநகர் டிஎஸ்பி சுதீர் தன்னை மிரட்டியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் குறித்து ஆளுநரிடம் புகார் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல்துறையினர் அவரை சந்திக்கவிடாமல் வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக, போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் இருந்து திமுகவினரை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் இறங்கினர். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கீதா ஜீவன் கூறுகையில், "எம்எல்ஏவை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கையில் ஒரு தொலைபேசி கூட வைத்திருக்க அனுமதிக்கவில்லை. மேலும் அவருடைய உதவியாளரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க இதுவரை அனுமதிக்கவில்லை.
அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, அவருக்கு முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. போலீஸ் அராஜகம் செய்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல் எவ்வாறு அவரை கைது செய்ய முடியும்? அவரை பார்க்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி மறுக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கட்சியை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள், ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் எங்களுடைய தலைவர் சட்டமன்ற உறுப்பினரை பார்த்துவிட்டு வர சொன்னார். ஆனால் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினர் மனதில் பட்டதைப் பேசினார். சட்டமன்றத்தில் சரியான பதிலடி இருக்கும் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது? ஆதவ் அர்ஜுனா முட்டாள் முதலமைச்சர் என பேசினார். நாங்கள் அவர்களை கைது செய்தோமா?
தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுதீர் என்பவர் தான், என்னை பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டினார். திமுகவினரை எந்த காரணம் கொண்டும் அடக்க முடியாது. தொட்டுப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டேன். அந்த டி.எஸ்.பியை பகிரங்கமாக ஆளுநரிடம் சொல்வேன்.
எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மனைவி எங்களிடம் தனது கணவரை கூட்டி சென்றிருக்கிறார்கள். அவர் உடல்நிலை சரியில்லை, முதுது வலி உள்ளது என்று கூறியிருக்கிறார். நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறினால் எங்களையே மாவட்ட காவல்துறை அச்சுறுத்தப் பார்க்கிறது. இந்த ஆட்சி நான்கு மாதம் தான், இவர்கள் ஆட்டம் நான்கு மாதத்தில் முடிந்து விடும்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
