விஜய் முதல்வர் ஆவார்னு யார் எதிர்பார்த்தாங்க.. தனுஷை குறைச்சு மதிப்பிட முடியாது.. துரை வைகோ
திருச்சி: 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் வெற்றி பல நடிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கும் முடிவில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனுஷ் அரசியல் குறித்து விஜய்யின் வெற்றியுடன் ஒப்பிட்டு துரை வைகோ சொன்ன கருத்து தவெக கூட்டணி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசின் மின்துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளுக்கு அதிக நிதி தேவை உள்ளது. ஏற்கனவே கடன் சுமை உள்ளது. தமிழகத்திற்கு ரூ.13 லட்சம் கடன் இருக்கிறது. எடுத்த உடனே கடனை குறைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் துறை சார்ந்த அமைச்சர் அமைச்சர் கூறியிருக்கிறார் என்றால் அவரிம் தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும்.

அதைப்பற்றி தெரிந்து கொண்டு தான் பேச முடியும். எந்த துறை டெண்டரிலும் 30 - 50 சதவீதம் கமிஷன் சென்று கொண்டிருந்தது. அது குறையும்போது, செலவு குறைந்து கடன் வாங்குவது குறையும். அதைத்தான் அமைச்சர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். புதிய அரசு வந்த பிறகு லஞ்ச, லாவாண்யம், பார்டி பண்ட் எதுவுமில்லை. எந்த குடும்பத்திற்கும் காசு கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
லஞ்ச லாவண்யம்
தவெக ஆட்சியில் செயற்கையான பண விரயம் கிடையாது. மாற்றத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதை சாத்தியப்படுத்தியுள்ளார். நிறைய டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. பல துறைகளில் முறைகேடு நடந்ததால் அதை இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாரோ செய்த தவறுக்காக ஜனங்கள் பாதிக்கப்படக் கூடாது. கடந்த காலங்களில் லஞ்ச லாவண்யம் நடந்ததை மட்டும் நிறுத்தி வைக்கிறார்.
யாருமே எதிர்பார்க்கவில்லை
அந்த திட்டங்களை அரசு நல்லபடியாக முடிக்கும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தமிழகத்திலும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது அவரவர் உரிமை. ஆனால் மக்களிடமே இறுதி முடிவு உள்ளது. இன்றைய முதலமைச்சர், ஆட்சியை பிடித்து முதலமைச்சராவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லையே. ஊடகவியலாளர்கள், பல அரசியல்வாதிகள் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அவர் முதலமைச்சராகியுள்ளார்.
தனுஷ் அரசியல்
இது மக்களின் தீர்ப்பு. அவர்களின் நடவடிக்கைகளே முக்கியம். இன்றைக்கு முதலமைச்சராக ஜோசப் விஜய் வந்துள்ளார். அவர் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வந்துள்ளார். தொடர்ந்து அவரின் செயல்பாடும் அதை உணர்த்துகிறது. அதேபோல சகோதரர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்றால் வரட்டும், அவரின் செயல்பாடு, மக்களிடம் பெறும் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே எதையும் சொல்ல முடியும்" என்றார். துரை வைகோவின் பேட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
