மதிமுக நிர்வாகிகளின் 2 மாத உழைப்பு! ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பற்றி துரை வைகோ பெருமிதம்!
சென்னை: தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி மதிமுக சார்பில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக நிர்வாகிகள் இதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் உழைத்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்பப் பெறக்கோரி இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ம.தி.மு.க நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக தங்களது கையெழுத்தினை பதிவு செய்தார்கள்.
ம.தி.மு.க நிர்வாகிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதிலிருந்தும் பெறப்பட்ட கையெழுத்துகளை, 20.09.2023 இன்று காலை, புதுதில்லியில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ எம்.பி அவர்களும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தியாகவேங்கை அ.கணேசமூர்த்நி அவர்களும் இந்திய குடியரசு தலைவரின் செயலகத்தில் ஒப்படைத்தார்கள்.
இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலமாக தமிழக மக்களின் உணர்வுகளை மறுமலர்ச்சி தி.மு.க பதிவு செய்து இந்திய குடியரசு தலைவரிடம் ஒப்படைத்து இருக்கிறது. கையெழுத்து இயக்கமும் மாபெரும் வெற்றிபெற்று உள்ளது. தமிழக ஆளுநரை இந்திய அரசு திரும்பப் பெறும் என நம்புவோம்.












Click it and Unblock the Notifications