சட்டசபையில் மாமன், மச்சான்னு கூப்பிடுவதா? நல்ல வேளை நானும் ஸ்டாலினும் அங்கு இல்லை! துரைமுருகன் கோபம்
சென்னை: சட்டசபையில் யாரையும் மாமா, மச்சான் என உறவு முறை வைத்து பேசக் கூடாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கட்சி எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், சட்டசபையில் நேரலையில் பார்க்கும் போது பலர் மாமா, மச்சான் என உறவு முறை வைத்து அழைக்கிறார்கள். இப்படி அழைக்கக் கூடாது.

திமுக உறுப்பினர்கள் செயல்பாடுகள் சரியாக இல்லை என கட்சியினர் புகார் அளித்திருந்தனர். திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை செயல்பாடுகளை பார்த்தால் நானும் ஸ்டாலினும் சட்டசபைக்கு இந்த முறை வராமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய கே.என். நேரு, நாங்கள் நிச்சயம் சட்டசபையில் சரியாக செயல்படுவோம். ஆனால் ஆளும் கட்சியை எதிர்ப்பதை நேரலையில் காட்டுவதில்லை என நேரு புகார் தெரிவித்திருந்தார்.
திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன், திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணனை குறிப்பிடும் போது "அவரு மாமாதான்.." என உறவு முறையை வைத்து பேசியிருந்தார்.
அப்போது துணை சபாநாயகர், அவையில் இது போல் உறவு முறை வைத்து பேசுவது அவை மரபிற்கு எதிரானது என கூறி துரை சந்திரசேகரனை கண்டித்ததுடன் அவர் பயன்படுத்திய மாமா என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். அப்போதும் விடாத துரை சந்திரசேகரன், "என் மாமாவை நீக்க சொல்றீங்களா" என கேட்டார். அதற்கு துணை சபாநாயகர், உங்கள் மாமாவை நீக்க சொல்லவில்லை, அந்த சொல்லைதான் நீக்க சொன்னேன் என்றார். அப்போதும் விடாத துரை சந்திரசேகரன், மாமாவை எப்படி நீக்கலாம் என கேட்டுக் கொண்டிருந்த போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபை விதிகள், மரபுகளின்படி நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மாண்புமிகு உறுப்பினர் என்றே அழைக்க வேண்டும். பெயர் சொல்லியும் அழைக்கக் கூடாது.
திமுக செயற்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. அப்போது 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில் நாம் பார்த்தா வெற்றியும் இல்லை, நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர நிரந்தரமாக இல்லை. திமுகவின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக இந்த தோல்வியை எடுத்துக் கொள்வோம்.
எந்தத் தனி மனித தவறாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்படுவது 75 ஆண்டு கால திமுக தான். தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து நபரை மாற்றுவதை விட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன்.
அந்த வகையில் கட்சி நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்ய இருக்கிறோம். இந்த மாறுதல்கள் கடுமையானதாக இருக்கும், சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்பு மருந்துதான் உடலுக்கு நன்மை செய்யும் என ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். விரைவில் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
