அடுத்த ஃபைலை ஓபன் செய்த CM விஜய்? திமுக மாஜி துரைமுருகன் மீது எஃப்ஐஆர்! வலுவாய் சிக்கும் புள்ளிகள்?
சென்னை: பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் திமுகவில் அடுத்த டார்கெட்டாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி அரசுக்கு சுமார் 1400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக துரைமுருகன், 18 அரசு அதிகாரிகள், 9 தனிநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 திமுக ஆட்சியின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மணல் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனையாது நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 1427 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. அப்போது நீர்வளாம் மற்றும் கனிமத்துறை அமைச்சராக இருந்தவர் தான் துரைமுருகன். அமலாக்கத்துறையின் அறிக்கை தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 6ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் குவாரி உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 34 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அப்போது நடத்தப்பட்ட சோதனையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு இடம் பெறவில்லை. இதற்கு இடையே அடுத்த கட்டமாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்படலாம் எனவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அவருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 27 பேரில் 18 பேர் அரசு அதிகாரிகள் என்பதும், 9 பேர் தனி நபர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளியது மட்டுமின்றி, மணலை எடுத்துச் செல்வதற்கான அனுமதி சீட்டுகளை போலியாக தயாரித்ததாக எஃப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் குறிவைக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கேஎன் நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது மணல் குவாரி முறைகேட்டில் துறைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Click it and Unblock the Notifications
