அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்! சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் ஓய்வு!
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்துவருகிறார்.
சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்பட்ட அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஒரே நாளில் அவர் வீடு திரும்பிவிட்டார். அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை 80 வயதை கடந்தவர் என்பதால் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிளைமேட் மாறியிருப்பதால் எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டாலும் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மார்கழி மாதத்தில் மழை பெய்து வருவது அந்தக்காலத்து முதியவர்களுக்கும், மூதாட்டிகளுக்கும் பெரும் வியப்பை கொடுத்திருக்கிறது. மார்கழி மாதத்தில் இப்படி மழை பெய்து தாங்கள் பார்த்ததில்லை என பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. அந்தளவுக்கு காலநிலை மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது இதன் மூலம் புரிகிறது.
இதனிடையே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அமைச்சர் துரைமுருகனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். மருத்துவர்கள் அறிவுரைப்படி தற்போது சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் ஓய்விலிருக்கும் அவர் ஓரிரு நாட்களில் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளப்பாதிப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பேரிடரில் சிக்கித் தவிக்கும் நிலையில் அமைச்சரவையில் மூத்தவரான துரைமுருகன் முதல்வருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் அவரோ உடல் நலமின்றி ஓய்வில் இருக்கிறார்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதும் பதறிப்போன துரைமுருகன், பொன்முடியை தொடர்பு கொண்டு பேசி நம்பிக்கை அளித்திருக்கிறார். அமைச்சர் துரைமுருகனை மையமாக வைத்து மணல் குவாரி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இவரது நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தரப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications