டிரம்ப் நிம்மதி.. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு வெற்றி!
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் அமெரிக்கா- ஈரான் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது. ஈரானும் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தீவிர முயற்சியின் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இடையே புதிய போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான ஜெனிவா கூட்டம் துவங்க உள்ளது உறுதியானது.

லெபனானில் அண்மைக் காலமாக அதிகரித்த வந்த இஸ்ரேலின் வன்முறை சம்பவங்கள், அமெரிக்கா - ஈரான் அமைதி முயற்சிகளுக்கு சவாலாக மாறிய நிலையில், இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கம் இடையேயான போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8:30 மணி) அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்த போர் நிறுத்தம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார். இஸ்ரேல் அதிகாரி ஒருவரும், ஹிஸ்புல்லா இயக்கத்தின் இரண்டு பேரும் இந்த போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் அதிகாரி கூறுகையில், "ஹிஸ்புல்லா எங்களைத் தாக்கவில்லை என்றால், எங்களுக்கு அது போர் காலம் அல்ல" என்று தெரிவித்தார். இருப்பினும், இஸ்ரேல் துருப்புகள் தெற்கு லெபனானில் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தாக்குதல்கள்?
போர் நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் சுமார் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், மாலை 5 மணிக்குப் பிறகு எவ்விதமான தாக்குதலும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது.
இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர், மாலை 5 மணிக்குப் பிறகு தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஒப்புக்கொண்டார். ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய 4:50 மணிக்கு சுமார் 12 தாக்குதல்கள் நடந்ததாக லெபனான் தரப்பு கூறியதை மறுத்தார்.
உயிரிழப்புகள்
லெபனானின் சுகாதார அமைச்சகத்தின் படி, மார்ச் 2 முதல் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் 3,912 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 746 பேர் மருத்துவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இஸ்ரேல் தரப்பில், ஹிஸ்புல்லாவுடனான சண்டையில் குறைந்தது 32 ராணுவ வீரர்கள் மற்றும் 4 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், போர் நிறுத்தத்திற்குப் பிறகும் சில தாக்குதல்கள் தொடர்ந்ததால், இந்த ஒப்பந்தம் எவ்வளவு உறுதியானது என்பதை பெரும் கேள்வியாகவே உள்ளது.














Click it and Unblock the Notifications