அம்மா மேடையில் உட்காருங்க! மண விழாவில் கெஞ்சிய திமுக எம்.எல்.ஏ! நாசூக்காக தவிர்த்த துர்கா ஸ்டாலின்!
சென்னை: திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்க சென்ற முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், மேடையில் அமர்வதை நாசூக்காக தவிர்த்து வந்த வேகத்தில் திரும்பிச் சென்ற நிகழ்வு சென்னையில் நிகழ்ந்துள்ளது.
துர்கா ஸ்டாலினை மணவிழா மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமருமாறு திமுக எம்.எல்.ஏ. எழிழரசன் கெஞ்சியும், அவர் நாசுக்காக அங்கு அமர்வதை தவிர்த்துவிட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள லேசான காய்ச்சல் காரணமாக அவருக்கு பதில் அந்த திருமணத்தை நடத்தி வைக்கச் சென்றார் துர்கா ஸ்டாலின்.

திமுக எம்.எல்.ஏ.
திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் இல்ல மண விழா சென்னை எழும்பூரில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெறும் என அழைப்பிதழ் அச்சிடப்பட்ட நிலையில் காய்ச்சல் காரணமாக அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து தனக்கு பதில் தனது மனைவி துர்கா ஸ்டாலினை அந்த திருமண விழாவுக்கு அனுப்பி வைத்து மணமக்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுத்துவிட்டார் ஸ்டாலின்.

மண விழா மேடை
முதலமைச்சர் ஸ்டாலினுக்காக மண விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலி அப்படியே இருந்தது. அதில் துர்கா ஸ்டாலினை அமருமாறு எழிலரசன் எம்.எல்.ஏ. துர்கா ஸ்டாலினை கேட்டுக்கொண்டார். ஆனால் அதெல்லாம் வேண்டாம், இருக்கட்டும் பரவாயில்லை என நாசூக்காக கூறிய துர்கா ஸ்டாலின், மணமக்களுக்கு மாலையையும், மாங்கல்யத்தையும் தனது கரங்களால் வாழ்த்தி எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த வேகத்திலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டார்.

முக்கியப் பிரமுகர்கள்
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தாமோ அன்பரசன், மற்றும் திமுக முக்கியப் பிரமுகர்கள் ஆ.ராசா உள்ளிட்ட பலர் அந்த விழா மேடையில் அமர்ந்திருந்தனர். துர்கா ஸ்டாலினுடன் அவரது மருமகன் சபரீசனும் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனிடையே திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் குடும்பத்தினர் துர்கா ஸ்டாலினுடன் மாற்றி மாற்றி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சபரீசனும் அமரவில்லை
இதனிடையே துர்கா ஸ்டாலின் தான் அந்த விழா மேடையில் அமரவில்லை என்றால் சபரீசனும் அங்கு அமர்வதை தவிர்த்துவிட்டார். இதன் மூலம் குடும்ப அரசியல் விமர்சனம் உள்ளிட்ட தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம் என்பதே காரணம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications