தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. கட்டுக் கட்டாக சிக்கிய பணம்
சென்னை: தமிழகம் முழுக்க இன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.28.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சந்தேகத்திற்கு இடமான ரூ.89.89 லட்சம் ஜிபே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகம் முழுக்க நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் பல்வேறு அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.31 லட்சம் லஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையிலேயே அதிகபட்சமாக இங்கு தான் அதிக பணம் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யும் ஊழல் செய்தவர்களை விட மாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன், இனி தொடுபவர்களையும் விட மாட்டேன் என எச்சரித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று பிற்பகலில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 38 அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னையில் மட்டும் பல்லாவரம், ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்கள், கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
இதில் கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து மட்டும் ரூ.31.52 லட்சம் லஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையிலேயே அதிகபட்சமாக இங்கு தான் அதிக பணம் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9,500 பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி ஆர்டிஓ சோதனை சாவடியில் ரூ.25,000 கைப்பற்றப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பிடிஓ அலுவலகத்தில் 'ஜிபே' மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.2.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக ரூ.4 ஆயிரம் சிக்கியது.
1.18 கோடி பறிமுதல்
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1,18,14,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.28.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜி பே மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.89.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற அதிரடி சோதனைகள் தொடரும், அடிக்கடி நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
