வாரிசு அரசியலுக்கு எதிராக உருவான மதிமுக-வாரிசு துரை வைகோவை திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவித்த வைகோ!
சென்னை: திமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்த போது வாரிசு அரசியலுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி மதிமுக எனும் தனிக்கட்சியையே தொடங்கியவர் வைகோ. அதே வைகோதான் இன்று தமது வாரிசான துரை வைகோவை திருச்சி லோக்சபா தொகுதி மதிமுக வேட்பாளராகவும் அறிவித்துள்ளார்.
1980களில் இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவை சிம்ம குரலில் கர்ஜித்து கிடுகிடுக்க வைத்தவர் அன்றைய வை.கோபாலசாமி எம்.பி. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு உரிய அனுமதி இல்லாமலேயே இலங்கை சென்று திரும்பியதால் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டவர். ஈழத் தமிழருக்கு உதவியதால் அன்றைய வை.கோபாலசாமியின் தம்பி வை. ரவிச்சந்திரன் தடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தார்.

வாரிசு அரசியலுக்கு எதிராக: 1990களில் திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களில் ஒருவராக வைகோ இருந்தார். அப்போது ஈழம் உள்ளிட்ட கொள்கை விஷயங்களில் வைகோ படுதீவிரமாக பேசியவர். நரம்பு புடைக்க பேசி இளைஞர் கூட்டத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்த வைகோவுக்கு தனி ஆதரவுப் பட்டாளமே உருவெடுத்தது. அப்போது இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவில் அடுத்த தலைவராக அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலமும் கூட. இதனை அன்றைய வை.கோபாலசாமி எம்பி ரசிக்கவும் இல்லை.. விரும்பவும் இல்லை. இதன் விளைவாக வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்ததுடன் திமுகவில் இருந்தும் வெளியேற்றப்படும் நிலைமையும் உருவானது.
தீக்குளித்து மாண்டவர்கள் எத்தனை எத்தனை: திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட காலத்தில் இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி, கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், காமராசபுரம் பாலன் என பலரும் அடுத்தடுத்து தீக்குளித்து மாண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகையவர்களின் மயான சாம்பலில் இருந்து வாரிசு அரசியலுக்கு எதிரான உரத்த முழக்கமாக உதயமானதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இதன் பின்னர் வை.கோபாலசாமி எனும் பெயரும் வைகோவானது.
திமுகவுடன் நட்பு காலம்: காலமும் அரசியலும் எப்பவுமே விசித்திரங்களை தன்னகத்தே கொண்டது. எந்த திமுகவை எதிர்த்தாரோ, எந்த கருணாநிதி, ஸ்டாலினை எதிர்த்தாரோ அதே திமுக, அதே கருணாநிதி, அதே ஸ்டாலினுடன் மதிமுக எனும் தனிக்கட்சியாக கை கோர்க்கவும் வைகோ கை கோர்க்கவும் தயங்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்து அரசியலில் விமர்சனங்களை அளவுக்கு அதிகமாகவே எதிர்கொண்டவர் வைகோ. அதேநேரத்தில் அண்மைக் காலம் வரை வாரிசு அரசியல் கூடாது என்ற கொள்கையில் மட்டும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
வேட்பாளராக வாரிசு: விதி வலியது என்பது போல.. வைகோவும் தமது மகன் துரை வையாபுரி எனும் துரை வைகோவை மதிமுகவுக்குள் பொறுப்புக்குக் கொண்டு வந்தார். இதனால் எஞ்சியிருந்த மதிமுகவின் மூத்த முன்னோடிகளும் வைகோவுக்கு குட்பை சொல்லிவிட்டு விடைபெற்று விட்டனர். வாரிசு அரசியலை எதிர்த்து சண்டமாருதமாய் முழங்கிய 'அண்ணன்' வைகோதான் இப்போது திருச்சி லோக்சபா தொகுதியில் தமது வாரிசு துரை வைகோவை மதிமுகவின் வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் தாக்குப் பிடித்த மதிமுகவுக்கு தனிச் சின்னமும் இருந்த காலம் உண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் எந்த உதயசூரியன் சின்னத்தை முடக்க வைகோ போராடினாரோ அதே உதயசூரியன் சின்னத்தில் தமது கட்சி வேட்பாளர்களையே நிறுத்தினார். இப்போது வைகோவுக்கு தனி சின்னங்களான குடையும் இல்லை.. பம்பரமும் இல்லை.. பம்பரம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.. இல்லாமலும் போகலாம் என்கிற திரிசங்கு நிலையில் வாரிசுக்காக தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் அன்றைய 'புரட்சி புயல்' வைகோ. அந்தோ பரிதாபமே!












Click it and Unblock the Notifications