இபி பில், கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டு பேமண்ட்.. வாட்ஸ்அப்பில் செம வசதி.. என்ன செய்யணும் தெரியுமா
சென்னை: வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதற்கும், போன் பேசுவதற்கும் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்திருப்போம்... ஆனால் இனிமேல் வீட்டில் உட்கார்ந்தபடியே கரண்ட் பில் கட்டலாம், கேஸ் பில் கட்டலாம்.. குடிநீர் கட்டணம் உட்பட அனைத்தையும் வாட்ஸ்அப்பிலேயே செலுத்தலாம். அதுவும் தனியாக வேறு செயலியை தேட வேண்டிய அவசியமில்லை. எப்படி செய்வது தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வீட்டு மின்சாரக் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம், குடிநீர் கட்டணம் என பலவற்றையும் வாட்ஸ்அப்பிலேயே செலுத்தும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் வசதிகள்
இதற்காக பாரத் கனெக்ட் கட்டண சேவை வலையமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் 22,722-க்கும் அதிகமான கட்டண நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அதற்காக, இனிமேல் கரண்ட் பில் கட்டுவதற்காக, தனியாக ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய தேவையில்லை.. வாட்ஸ்அப்புக்குள்ளேயே இதை ஈஸியாக செய்துவிடலாம்.
முதலில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும். முகப்பு பக்கத்தின் மேல்பகுதியில் தெரியும் ₹ ரூபாய் குறியீட்டை அழுத்த வேண்டும். அங்கு கட்டணம் செலுத்துவதற்கான பகுதி திறக்கும். அதில் மின்சாரம், எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட எந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
மின்சாரக் கட்டணம் செலுத்தலாம்
மின்சாரக் கட்டணம் என்றால், உங்கள் மின்சார விநியோக நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக, மின் இணைப்பு எண் அல்லது வாடிக்கையாளர் கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக இருந்தால், செலுத்த வேண்டிய தற்போதைய கட்டணத் தொகை செல்போன் ஸ்கிரீனிலேயே தெரியும். அந்தத் தொகையைச் சரிபார்த்த பிறகு பணம் செலுத்தலாம்.
பணம் செலுத்துவதற்கும் பல வழிகள் உள்ளன... யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். அதேபோல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும். பணம் செலுத்தி முடித்த பிறகு, அதற்கான விவரங்களையும் பார்க்க முடியும்.
சுங்கச்சாவடி கட்டணம், காப்பீடு, கிரெடிட்
இதில் இன்னொரு சூப்பர் வசதியும் இருக்கிறது. ஏற்கனவே நீங்கள் செலுத்திய கட்டணங்களின் விவரங்களை மீண்டும் பார்க்கலாம். அடுத்து செலுத்த வேண்டிய கட்டணம் ஏதாவது இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஒரே சேவை நிறுவனத்தில் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் என ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால், அவற்றையும் ஒரே இடத்தில் சேர்த்து நிர்வகிக்க முடியும்.
மின்சாரம், கேஸ் சிலிண்டர், குடிநீர் மட்டும் கிடையாது. சுங்கச்சாவடி கட்டணம், காப்பீடு, கிரெடிட் கார்டு பில் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் வாட்ஸ்அப் வழியாகவே செலுத்த முடியும். இதுபோல் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் 22,722-க்கும் அதிகமான சேவை நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப்பில் ₹ ரூபாய் குறியீடு
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த வசதி அனைவருடைய வாட்ஸ்அப்பிலும் ஒரே நேரத்தில் வந்துவிடாது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு இது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதனால் உங்கள் வாட்ஸ்அப்பில் ₹ ரூபாய் குறியீடு தெரியவில்லை என்றால், உடனே பதற்றப்பட வேண்டாம். உங்கள் கணக்குக்கு இந்த வசதி இன்னும் வழங்கப்படாமல் இருக்கலாம்.
வாட்ஸ்அப்பில் இந்த ரூபாய் குறியீடு வந்துவிட்டால், தனியாக வேறு செயலியைத் தேடி மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் குறையும். தினமும் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பிலேயே வீட்டுக்குத் தேவையான பல கட்டணங்களையும் செலுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் இந்த வசதியின் முக்கியமான சிறப்பு...!!!


Click it and Unblock the Notifications
