EC முதல் பட்டா வரை.. பதிவுத்துறையில் ஒரே மாதிரியான நடைமுறை வேண்டும்! டாக்டர் ஹென்றி முக்கிய கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையில் நடைமுறையில் உள்ள "Presence-less Registration", Online Document Registration, Online EC, QR Code EC, வங்கி / நிதி நிறுவன NOC, Guideline Value, இணையவழி பதிவு சேவைகள், பதிவு ஆவணங்களின் அச்சு வசதி, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தி, பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் துறையினருக்கும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான மற்றும் தடையற்ற சேவையை வழங்க வேண்டும் என பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி, பதிவுத்துறை தலைவருக்கு விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், நடைமுறையில் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் மற்றும் தொடர்புடைய தரப்பினர் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:
பதிவுத்துறை தலைவர்
வருகையில்லா ஆவணப் பதிவு நடைமுறையில் தேவையற்ற Office EC கட்டாயத்தை நீக்கி, பொதுமக்களுக்கு எளிமையான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். திட்டங்களில் வங்கி அல்லது NBFC வழங்கும் NOC அடிப்படையில் Unit-wise / Plot-wise விற்பனைப் பதிவுகளுக்குத் தெளிவான மற்றும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை வகுக்க வேண்டும்.
ஏற்கனவே வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் புதிய இணையவழி அமைப்பில் விரைவாக ஒருங்கிணைக்க வேண்டும். Presence-less Registration மற்றும் பிற ஆன்லைன் பதிவு சேவைகளுக்கு தெளிவான, தனித்தனி Online Service Channels உருவாக்க வேண்டும். பொதுமக்களின் தேவைக்கேற்ப பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை Stamp Paper-ல் அச்சிடும் விருப்ப வசதியை ஏற்படுத்த வேண்டும்.
புதிய ஆன்லைன் பதிவு நடைமுறைகள்
புதிய ஆன்லைன் பதிவு நடைமுறைகள், கட்டணங்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து தெளிவான அறிவிப்புப் பலகைகள் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அமைக்க வேண்டும். பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து புதிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தமிழில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புதிய டிஜிட்டல் நடைமுறைகள் முழுமையாக நிலைபெறும் வரை Online மற்றும் Offline Registration முறைகளை இடைக்காலமாக இணைந்து செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பக் கோளாறு அல்லது பிற தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் தாமதங்களை கருத்தில் கொண்டு 30 நிமிட காலவரம்பை நெகிழ்வுபடுத்த வேண்டும். ஆவணப் பதிவு ஆன்லைனில் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரும் சிறிய காரணங்களுக்காக பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய நிலையைத் தவிர்க்க வேண்டும்.
TNREGINET / STAR 3.0
சிறிய மற்றும் சரிசெய்யக்கூடிய குறைகளுக்காக ஆவணங்களை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பாமல், ஒரே கட்டத்தில் குறைகளைத் தெரிவித்து சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். TNREGINET / STAR 3.0 உள்ளிட்ட இணையவழி சேவைகளில் ஏற்படும் Server, Login, Upload, Payment மற்றும் Technical Issues-க்கு உடனடி தீர்வு காண வேண்டும். பதிவுத்துறையும் வருவாய்த்துறையும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பச் செயல்முறையில் செயல்பட்டு, பதிவு முடிந்த பின்னர் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் மாறுபட்ட நடைமுறைகள் இல்லாமல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தெளிவான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் பதிவு சேவை தொடர்புடையவர்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த Help Desk மற்றும் Grievance Redressal Mechanism உருவாக்க வேண்டும்.
பட்டா, உயிர்ச் சான்றிதழ்
ஆன்லைன் Payment தோல்வியடைந்தால் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாமல், Transaction Status மற்றும் Refund நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். QR Code EC உருவாகுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, உடனடி அல்லது குறைந்தபட்ச காத்திருப்பு நேரத்தில் EC கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
Plot Layout Map பதிவேற்றத்திற்கான விருப்பம் சில நேரங்களில் காணாமல் போகும் தொழில்நுட்பச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பட்டா, உயிர் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான துணை ஆவணங்கள் ஆன்லைன் அமைப்பில் சரியாகக் காட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசாணை / நடைமுறை விதிமுறைகளுக்கு மாறாக அனைத்து தரப்பினரிடமும் கூடுதல் கையொப்பம் கோரப்படுவதைத் தவிர்த்து, தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
அடையாள ஆவணங்கள்
ஆன்லைன் ஆவண வரைவில் பயன்படுத்தப்படும் எழுத்துரு அளவை பொதுமக்கள் எளிதில் வாசிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். அருகருகே அமைந்துள்ள மனைகளுக்கு ஒவ்வொன்றாக தனித்தனி GPS புகைப்படம் பதிவேற்ற வேண்டிய நடைமுறையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு அடையாள ஆவணத்தையும் தனித்தனியாக பதிவேற்ற வேண்டிய
செயல்முறையை எளிமைப்படுத்தி, பாதுகாப்பான Bulk / Multiple Upload வசதியை ஏற்படுத்த வேண்டும். பதிவுத்துறையின் டிஜிட்டல் சீர்திருத்தப் பணிகளில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் தேவையான கருத்துகள், கள அனுபவங்கள் மற்றும் பொதுமக்களின் நடைமுறைப் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.
வங்கி அடமான ஆவணங்கள்
புதிய இணையவழி அமைப்பில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை கண்காணித்து, விரைவான தீர்வு வழங்கும் சிறப்பு தொழில்நுட்பக் குழுவை வலுப்படுத்த வேண்டும். சிறிய அளவிலான உட்பிரிவு அனுமதி தொடர்பான திட்டங்களிலும் தகுந்த விதிமுறைகளுடன் வருகையில்லா ஆவணப் பதிவு வசதியை விரிவுபடுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட் திட்டங்களில் விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கி அடமான ஆவணங்களை ஒருங்கிணைத்து, தேவையற்ற காலதாமதம் மற்றும் மீண்டும் மீண்டும் நடைபெறும் நடைமுறைகளைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த பதிவு நடைமுறையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான, வெளிப்படையான, எளிமையான, விரைவான மற்றும் பொதுமக்களுக்கு உகந்த பதிவுச்சேவை உருவாக வேண்டும். இதற்காக பதிவுத்துறையுடன் இணைந்து செயல்பட FAIRA எப்போதும் தயாராக உள்ளது' என டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
