இந்த பக்கம் குறைத்து.. அந்த பக்கம் ஏற்றி.. எந்த பயனும் இல்லை.. பட்ஜெட் குறித்து ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பிரபல பொருளாதார நிபுணரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவு தலைவருமான ஆனந்த் சீனிவாசன் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரை ஆற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை உரையின் பின்பாதியில் வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.

New Regime எனப்படும் புதிய வரிவிதிப்பு முறையை, பின்பற்றுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள் என்றார்.
வரி குறைப்பு: மேலும், புதிய வரி முறையை பின்பற்றுவோருக்கு, ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை, ரூ.3 - 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி, ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி, ரூ. 10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி, ரூ. 12 முதல் - 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என வரி விகிதங்களை அவர் அறிவித்தார்.
மேலும், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ல் இருந்து 6% ஆக குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%-ல் இருந்து 6.5%ஆக குறைக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்: இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பிரபல பொருளாதார ஆய்வாளரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவு தலைவருமான ஆனந்த் சீனிவாசன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "புதிய வரிவிதிப்பு முறையில் ரூ. 17,500 வரை வரியை குறைத்துள்ளனர். நிலையான வருமான வரி கழிவு ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு பார்த்தால் ரூபாய் 10 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு ரூ. 17,500 வரை வரி குறையும்.
பயன் இல்லை: வரி விலக்கு வரம்பு 3 லட்சம் என்பதில் பெரிதாக பயன் கிடையாது. ஏற்கனவே பிரிவு 87ஏ படி, ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை இருப்பவர்களுக்கு வரி கிடையாது. 7 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் ரூ. 17,500 வரி குறையும். 60 ஆயிரம் வரி கட்ட வேண்டியவர்கள், 42 ஆயிரம் என்ற அளவில் கட்ட வேண்டி இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டில் 10 சதவீதமாக இருந்த வரியை 12.5 சதவீதமாக ஆக்கி இருக்கிறார்கள். ஆண்டு வருமானம் 7 லட்சத்துக்கு அதிகம் உள்ள பிரிவினர் தான் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்கள். அவர்களுக்கு வரியில் 17500 குறைத்திருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் விற்றால் அவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்தப் பக்கம் குறைத்து இந்தப் பக்கம் வரியை ஏற்றியுள்ளனர்.
தங்கம் விலை குறையும்: தங்கத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 12 சதவீதமாக இருந்த தங்கத்திற்கான வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ. 3000 குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை ரூ. 220 கிராமுக்கு குறையும். தங்கம் மீதான சுங்க வரி குறைப்பால் தங்க நகைகள் விலை குறையும் என்பது தான் இந்த பட்ஜெட்டில் முக்கியமானது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications