அதிமுக மாஜி அமைச்சர்.. ஓபிஎஸ் வலதுகரம்.. வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துகளை முடக்கிய ED
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் அவர் ஒரத்தநாடு தொகுதியில் தோற்றார். அதன்பிறகு 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை வீட்டு வசதி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

அமைச்சராக இருந்தபோது குடியிருப்புகள் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை உள்ளே வந்தது.
வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை தனியே வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை வழக்கை பதிந்தது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வைத்திலிங்கத்தின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிரமாக சோதனை மேற்கொண்டது. மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. '
இந்நிலையில் தான் தற்போது வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் அமலாக்கத்துறை, ‛‛தமிழ்நாட்டின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 ம் தேதி வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கி உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications