நீதிமன்ற உத்தரவு வந்த மறுநொடி! செந்தில் பாலாஜி உள்ள புழல் சிறையை சூழ்ந்த அமலாக்க துறை! பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அன்று நள்ளிரவில் அவரை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
செந்தில் பாலாஜி: இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பை அளித்த நிலையில், இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது. இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி கைது சரிதான் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி தரப்பினர் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டப்படி சரியானது என்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் 167 இன் படி அமலாக்கத் துறை ஒருவரைக் கைது செய்து காவலில் வைக்கலாம் என தெரிவித்தது. மேலும், அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்குக் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரி அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அனுமதி: இது நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வழியாக ஆஜரானார். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்து வரும் ஆகஸ்ட் 12 வரை செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக அவருக்கு இரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக் காட்டி இதில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என முதன்மை கோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
அமலாக்கத் துறை: நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து நொடியும் தாமதமின்றி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் அமலாக்கத் துறை இறங்கியது. இதற்காகச் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள புழல் சிறைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் விரைந்தனர். நீதிமன்ற உத்தரவின் நகலைக் காட்டி செந்தில் பாலாஜியை விசாரணைக்காகப் புழல் சிறையில் இருந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சென்னை முதன்மை நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த நிலையில், அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். இதனால் அங்குச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இன்று இரவே அவரிடம் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications