விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சி விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 34 கோடியே 79 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும் இருந்தார். அதனால்தான் அடுத்தடுத்து இரண்டு முறை அவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் விஜயபாஸ்கர். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கியவர். குறிப்பாக குட்கா முறைகேடு வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என அவர் மீது பல முறை முறைகேடு புகாரர்கள் இருக்கிறது.

சி. விஜயபாஸ்கர்
இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சி. விஜயபாஸ்கர். இந்த நிலையில் திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க முயன்றதாக கூறி எம் ஆர் விஜயபாஸ்கர், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர்டன் சேர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
கட்சி சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சி விஜயபாஸ்கரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வரும் நிலையில் தற்போது அவருக்கு புதிய நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது.
அமலாக்க துறை
அதாவது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. 2016 2021 அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தபோது அவர் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 34 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அதன் அடிப்படையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்தது.
விஜய் ஆட்சி
ஏற்கனவே அவர் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை கடிதம் சம்மன் அனுப்பிய நிலையில் சி. விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. இதை அடுத்து வரும் 18ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. லஞ்சத்தை ஒழிப்போம்.. ஊழலை ஒழிப்போம் என கூறி விஜய் ஆட்சிக்கு வந்து நிலையில் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த போது எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விஜய்க்கு நெருக்கடி
இந்த நிலையில் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயபாஸ்கரை வைத்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு என தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் 2வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு விஜயபாஸ்கர் பதிலளிப்பாரா? விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications
