தவெக விஜயபாஸ்கருக்கு மீண்டும் குறிவைக்கும் அமலாக்கத்துறை! நவம்பர் 18 குறிக்கப்பட்ட நாள்! நெருக்கடி
சென்னை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் அனுப்பியுள்ளது. வரும் நவம்பர் 18-ஆம் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 6 விசாரணையைத் தவிர்த்த விஜயபாஸ்கர்
சுமார் ₹35.79 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே நவம்பர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி ஆஜராகாத நிலையில், தற்போது நவம்பர் 18-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என புதிய சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது மனைவி வி. ரம்யாவுக்கும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் முழுப் பின்னணி என்ன?
கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சி. விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில், தனது அரசுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியது. விரிவான விசாரணைக்குப் பிறகு, 2023 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விஜயபாஸ்கர் கணக்கில் வராத ₹35.79 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2024 மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அதன் பிறகு அவரை அழைத்து வாக்குமூலமும் பதிவு செய்திருந்தனர்.
தவெகவுக்குள் வந்த பிறகு அதிகரிக்கும் நெருக்கடி
அதிமுக-வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சி. விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் நீண்ட காலமாகச் செல்வாக்கு மிக்க முகமாக வலம் வரும் அவர், தற்போது தவெக-வின் களப்பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறார். இவர் தவெக விராலிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு எதிராக வழக்கு தீவிரம் அடைந்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறை மீண்டும் விஜயபாஸ்கருக்குத் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் முக்கிய நிர்வாகிகளுக்குக் குறிவைத்து, மத்திய அரசு மறைமுக அரசியல் அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களால் எழுப்பப்படுகிறது.
மறுபுறம், புதுக்கோட்டை மண்டலத்தில் கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டிய முக்கியமான நேரத்தில், விஜயபாஸ்கருக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சட்ட நெருக்கடி உள்ளூர் தவெக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராவாரா அல்லது சட்டரீதியாக வேறு ஏதேனும் அவகாசம் கோருவாரா என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
