3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது.தற்போது எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூன்று முறை பிரதமராக உள்ள மோடியின் பாஜகவிற்கே 27 சீட் தான் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்தஅளவிற்கு பலம் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ சீட் மிக அதிகம் என திமுக உடன்பிறப்புகள் இணையதளத்தில் குமுறுகிறார்கள்.
தமிழத்தில் திமுக காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் ஒரு அணியாகவும், அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. விஜய்யின் தவெக தனியாக களம் இறங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனியாக களம் இறங்கி உள்ளது. இதில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணிகளுக்கு எத்தனை தொகுதி என்பது வெளியாகிவிட்டது.

எந்த தொகுதியில் யார் போட்டி என்பதும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.. தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்பது வெளியாகி உள்ளது. அதில் பாஜகவிற்கு 27 இடங்களும், பாமகவிற்கு 18 இடங்களும், அமமுகவிற்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜகவிற்கு 27 இடங்கள்
பாஜகவிற்கு வெறும் 27 இடங்கள் தான் என்பதை திமுகவினரே நம்பவில்லை.. ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஏனெனில் பாஜக தான் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் மோடி, கடந்த 2014, 2019, 2024 என மூன்று தேர்தல்களில் வென்று பிரதமராக இருக்கிறார். பாஜக தமிழகத்தில் கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் 27 சீட் தானா என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் அதிகம் எனறு திமுகவினர் விமர்சிக்கிறர்கள். "கூட்டணி தர்மம் ஓகே, ஆனா இது ரொம்ப ஓவர்" என்பதே அவர்களின் குரல்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
"மாமன் எடப்பாடியே 27 தான் கொடுத்திருக்கார்" - வைரலாகும் எக்ஸ் பதிவு
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு எக்ஸ் ( பதிவில், திமுக ஆதரவாளர் ஒருவர் தனது உச்சக்கட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில் அவர், "தொடர்ந்து மூன்று தடவ பிரதமரா இருக்குற கட்சிக்கே மாமன் எடப்பாடி 27 சீட் தான் குடுத்திருக்கார். ஆனா நாம ஒன்னத்துவுக்கும் லாயக்கு இல்லாத இந்த துரோகிகளுக்கு (காங்கிரஸ்) 28+1 வாரி வழங்கி இருக்கோம்..." என்று பதிவிட்டுள்ளார். மேலும், "நினைக்கும் போதெல்லாம் தலை வலிக்குது பாசே..." என்று ஒரு மீம் படத்தையும் இணைத்துள்ளார். இந்த ஒற்றைப் பதிவு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றுள்ள இடங்கள் குறித்து தொண்டர்களின் மனதில் இருக்கும் குமுறலை காட்டுகிறது.

டேட்டா வைத்து தான் பேசுகிறார்கள்
திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதற்கு கையில் வலுவான புள்ளிவிவரங்கள் உள்ளன. கடந்த 2016 முதல் 2024 வரை தமிழகத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக வாங்கிய வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் புள்ளி விவரங்கள் பாஜகவிற்கு சாதமாகவே உள்ளது. 2019-ல் திமுக அலையில் 12.61% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 2024-ல் தனித்துப் போட்டியிட்ட பாஜகவை விடக் குறைவாக, 10.67% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 2019-ல் வெறும் 3.66% வாக்குகளைப் பெற்ற பாஜக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 11.24% வாக்குகளைப் பெற்று, காங்கிரஸைத் முந்தியுள்ளது. காங்கிரஸ் பெற்ற வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணியின் பலத்தால் வந்தவை என்று குமுறும் திமுக உடன்பிறப்புகள், தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸின் பலம் என்ன என்பது தெரியும் என்றும் விமர்சிக்கிறார்கள்.
" பாஜகவிற்கு 27... காங்கிரசுக்கு 28+1?" - இதுதான் கேள்வி!
இந்தத் தரவுகளை வைத்துத்தான் திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். தேசிய அளவில் வலுவாக இருக்கும் பாஜகவிற்கே அதிமுக 27 இடங்களைத்தான் கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் செல்வாக்கு இழந்த, தனித்துப் போட்டியிட்டால் 5% வாக்குகளைக் கூடப் பெற முடியாத காங்கிரசுக்கு 28+1 இடங்களைக் கொடுத்திருப்பது திமுகவிற்குப் பெரும் இழப்பு என்றே அவர்கள் கருதுகிறார்கள்.
திமுக தலைமையின் நிலைப்பாடு என்ன
திமுக தலைமை, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. "பாஜகவை வீழ்த்த வேண்டும்" என்ற ஒற்றை இலக்குக்காக, உடன்பிறப்புகளின் குமுறலையும் மீறி, காங்கிரசுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளது. திமுக உடன்பிறப்புகளின் இந்தக் குமுறல், தேர்தல் முடிவுகளில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்..


Click it and Unblock the Notifications
