அதிமுகவில் எடப்பாடியை நெருக்கும் 4 ‘பவர் சென்டர்’கள்.. ஓபிஎஸ் கையில் அஸ்திரம்.. துக்ளக் ரமேஷ் பரபர!
சென்னை : "எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், அதிமுகவிற்குள் இப்போது 'பவர் செண்டர்'கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை மீறி எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் ஒன்றுமே செய்ய முடியாது." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்.

ஓபிஎஸ் எடுக்கும் அஸ்திரம் : துக்ளக் ரமேஷ் பேசுகையில், "ஓபிஎஸ் தனது அரசியல் பயணத்தில் ஒரு முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்கான துவக்கப் புள்ளிதான் திருச்சி கூட்டம். நீதிமன்றங்கள் மூலமாகவே அரசியலை நடத்திக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவுகளே வந்திருக்கின்றன. ஓபிஎஸ்ஸால் ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியுமா எனக் கேட்ட எடப்பாடி அணியினருக்கு திகைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் பெருமளவில் அதிமுக தொண்டர்கள். ஓபிஎஸ் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார். தனிக்கட்சி தொடங்குவதோ, பாஜகவில் இணைவதோ, தினகரன் + சசிகலாவோடு நட்பு பாராட்டி செயல்படுவதோ ஓபிஎஸ்ஸின் கணக்காக இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி அணியில் குறிப்பிட்ட 2 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் விமர்சித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக பலம் பெறுவதற்கு சில அஸ்திரங்களை பயன்படுத்தவே செய்வார்கள். ஓபிஎஸ் சாதி எனும் அஸ்திரத்தை கையில் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தென் மாவட்டங்களில் இன்னொரு கூட்டத்தை நடத்தி அவர் சசிகலாவுக்கு அழைப்பு விடுப்பது என்ற யோசனையும் ஓபிஎஸ் அணியில் இருப்பதாகத் தெரிகிறது.
எடப்பாடி ஆட்சியை இழக்கக் காரணம் : எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழக்கக் காரணம் டிடிவி தினகரன். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி 22 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே இருக்கிற வாக்கு வித்தியாசத்தை அமமுக வாங்கி இருக்கிறது. 22 தொகுதிகளில் அமமுகவால் அதிமுக தோற்றது. மூன்றரை சதவீத வாக்குகளை 3.5 வாக்குகள் பெற்றிருக்கிறார். தினகரன் களத்தில் இல்லை என்றால் அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கு கிடைத்திருக்க வேண்டியவை. ஓபிஎஸ் + டிடிவி தினகரன் எல்லாம் சேரும்போது இந்த வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.
அதிமுக என்ன எடப்பாடி பழனிசாமிக்கு பட்டா போட்டுக் கொடுத்த கட்சியா? இவரை சேர்க்க மாட்டேன், அவரைச் சேர்க்க மாட்டேன் எனச் சொல்வதற்கு ஈபிஎஸ் யார்? அதிமுக தொண்டர்களால் வளர்ந்த கட்சி. இன்று ஒரு கூட்டம் ஈபிஎஸ்ஸை ஏற்றுக்கொண்டுள்ளது. முதல்வராக ஆட்சியில் இருக்க ஓபிஎஸ் தயவு தேவைப்பட்டது. ராஜ்யசபா சீட்டை ஓபிஎஸ் கேட்டதால், எல்லாவற்றிலும் தனக்கே அதிகாரம் வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ்ஸை தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் அதிகார மையங்கள் : எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால், அவரது அணியில் தவிர்க்க முடியாத சில சக்திகள் உருவாகி இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் மீறி எடப்பாடியால் எந்த முடிவெடுக்க முடியாது. ஓபிஎஸ்ஸை அலட்சியப்படுத்தியது போல தைரியமிருந்தால் எஸ்.பி.வேலுமணியை எடப்பாடி பழனிசாமி அலட்சியப்படுத்த முடியுமா? இன்னும் சில பெயர்களை நான் சொல்ல மாட்டேன். அவர்களை கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடப்பாடி பழனிசாமியால் எடுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் என்பது இப்போது வெறும் பதவி தான். அதிமுகவிற்குள் இப்போது 'பவர் செண்டர்'கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை மீறி ஈபிஎஸ்ஸால் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த 4 பவர் செண்டர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டங்களில் அவர்களை மீறி ஈபிஎஸ்ஸால் யாருக்கும் சீட் கொடுக்க முடியாது. இதுதான் அதிமுகவின் இன்றைய நிலை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications