எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்.. அறப்போர் இயக்கத்தின் மேல்முறையீடு.. தடை விதிக்க மறுத்த ஹைகோர்ட்
சென்னை: நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முதல் முன்னாள் முதலமைச்சரும்,அந்த துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்படதாகவும், தனி நபர் விமர்சனம் வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் அளிக்க உத்தரவு
மேலும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய அதிகார வரம்பை தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மனு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அறப்போர் இயக்கம்
இந்த வழக்கின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.. கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

அவதூறு பேச்சு
இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும், தன்னை பற்றி அவதூறாக பேசுவதற்கு தடைவிதிக்கக்கோரியும்அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்தார்.

என்ன வாதம்
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என கூறப்பட்டது. ஒரு நிறுவனத்திற்க்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை என்றும் வாதிடப்பட்டது. தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஜனநாயகத்தின் அடிநாதம்
அறப்போர் இயக்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிட்டார். மேலும், ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும் அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடி நாதம் என்றும் தெரிவித்தார்

நீதிபதி உத்தரவு
2018-19 ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ.276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு எனவும் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கில் கடந்த 2022 டிசம்பர் 2ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிச்சாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி தான் அறப்போர் இயக்கம் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதிக்க மறுத்ததுடன், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications