ஓகே சொன்ன உச்ச நீதிமன்றம்.. ஓ பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி வைத்த பெரிய செக்.. நாளை ரொம்ப முக்கியம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் நாளை முக்கியமான விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து வாய்தா கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த வாதங்களில், அதிமுகவில் எடப்பாடி மேற்கொண்டு மாற்றங்கள் எதையும் செய்ய கூடாது. அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது. தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உறுதி மொழி
நீங்கள் கட்சியில் மாற்றம் எதையும் செய்யாமல் இருப்பீர்களா என்று எடப்பாடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நீங்கள் உறுதி கொடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளும் எடப்பாடியிடம் கூறினர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இரண்டு நீதிபதிகளிடமும் கட்சியில் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார். இதன்பின் நடந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம், அடிக்கடி நேரம் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி நேரம் வாங்கினார். கடந்த விசாரணையின் போது ஓ பன்னீர்செல்வம் மீது கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் இதனால் வைத்தது.

உச்ச நீதிமன்றம்
அதில், நீங்கள் தானே இது கட்சி விவகாரம். வழக்கை உடனே விசாரியுங்கள் என்று கூறினீர்கள். அதற்குத்தான் உச்ச நீதிமன்றம் வந்தீர்கள். ஆனால் ஏன் அடிக்கடி ஒத்திவைக்க சொல்கிறீர்கள். தொடர்ந்து ஏன் அவகாசம் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இது நீதிமன்றத்திற்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வேண்டாமா என்று கண்டிப்புடன் பேசினார்கள். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. கடந்த விசாரணையின் போது வேறு ஒரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த வழக்கு விசாரணை காரணமாக தேர்தல் ஆணையம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்கவில்லை.

பொதுக்குழு
அதனால் அதிமுக விதிகளை மாற்ற முடியாமல் கட்சி முடங்கி உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் முடிவுகளை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு போட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுத்தாக்கலை உடனே செய்யுங்கள். உங்களுக்கு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதற்கு எதிர்மனுதாரர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி இதில் கூடுதல் மனுதாக்கல் செய்தார்.

கூடுதல் மனு
அந்த மனுவில் அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார். இந்த மனுதாக்கல் செய்யப்பட்டபின் எடப்பாடிக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் அதிமுக விதி மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று கூற வாய்ப்புகள் உள்ளன.

பதில் அளிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு விசாரணை நடப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இந்த மாற்றங்களை அங்கீகரிக்கவில்லை. இதை மாற்றும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாளை இதில் விசாரணை நடக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடக்க உள்ள நிலையில் இந்த மனு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் நாளையில் இருந்து 2 நாட்களில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும், வைரமுத்து தரப்பும் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலை பொறுத்தே வழக்கில் அடுத்த கட்ட மாற்றங்கள் ஏற்படும். இதில் இடைக்கால உத்தரவு வரும் பட்சத்தில், இதுவரை எடப்பாடி எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கிடப்பில் போட்டு இருக்கும் கோப்புகளில் ஒருவித இறுதி முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கை மேலும் தள்ளி வைக்க கூடாது. என்ன நடந்தாலும் விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கூறி உள்ளது. உச்ச நீதிமன்றம் இதனால் நாளை இந்த மனுவை கண்டிப்பாக விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வழக்கு தள்ளி போகாமல் முழு விசாரணை நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications