அதிமுக கூட்டணியில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதற்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்காக ஒத்த கருத்துடைய கட்சியெல்லாம் இணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற எண்ணுகிறவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 7ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை 7 மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பாடல், லோகோ வெளியீடு
இந்த பயணத்தின் போது பொதுமக்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அதிமுகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்காக இலச்சினை மற்றும் பாடல் இன்று வெளியிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இதனை அதிமுக தலைமையிலான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் சொல்லி மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம். கடந்த 50 மாத ஆட்சியில் மக்கள் அடைந்து வரும் துன்பங்களை எடுத்து கூறி அதிமுகவுக்கு ஆதரவு திரட்ட உள்ளோம்.
முதல்வர் வேட்பாளர் யார்?
இந்த சுற்றுப்பயணத்தின் போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணிக்கு நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா கூட்டணி அறிவிப்பின் போதே அறிவித்துவிட்டார் என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணியில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தவெகவுக்கு அழைப்பு?
அதற்கு எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்து உடைய கட்சியெல்லாம் இணைந்து போட்டியிட வேண்டும். திமுக அகற்றப்பட வேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி. அவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்று தெரிவித்தார்.
விஜய் அறிவிப்பு
இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணிக்குள் தவெக வர வேண்டும் என்ற விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தலைமையில் கூட்டணி என்று கூறப்பட்டிருக்கிறது.
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?
அதேபோல் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை. அதிமுகவுக்கான கதவுகளை விஜய் திறந்து வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் தொகுதி பங்கீட்டின் போது பாஜகவுடன் பிரச்சனை வரும் பட்சத்தில், கடைசி நேரத்தில் கூட அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு எடுப்பதில் சிக்கல் வரலாம் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications