சீக்கிரமே திமுக அதிமுக கூட்டணி? ஒரு நொடி யோசித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன நறுக் பதில்! நோட் பண்ணுங்க
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப் பிற கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதில் அதிமுகவின் பரம எதிரியான திமுகவும் உடன் இணையுமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது இரு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியிருந்த நிலையில், திமுக அதையும் தாண்டி வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது. மதுராந்தகத்தில் எஸ் பரந்தாமன், தாராபுரத்தில் எஸ் சுகன்யா போட்டியிடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
அதேநேரம் விஜய்யின் தவெகவை வீழ்த்த இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒன்றாக வருமே என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக திமுக- அதிமுக கூட்டணி குறித்தும் கூட பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி இது குறித்து சில முக்கிய பதில்களை கூறியிருக்கிறார்.
அதாவது அவரிடம் விஜய்க்கு எதிரான கூட்டணி உருவாகி வருகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆம். நாங்களும் தவெகவுக்கு எதிர் எதிராக தான் இருக்கிறோம். வேறு எந்தக் கட்சி வந்தாலும் வரவேற்கிறோம். எங்களது கூட்டணி அப்படியே இருக்கிறது. மற்ற கட்சிகள் வந்தால் அவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்" என்றார்.
திமுக- அதிமுக கூட்டணி
தொடர்ந்து திமுக- அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு அவர், "புதிதாக கட்சிகளும் எங்களுடன் வந்து சேரலாம். திமுக வருமா என கேட்கிறீர்கள்? இந்தக் கேள்வியை திமுகவிடம் நீங்கள் கேட்கலாமே?" என செய்தியாளரை நோக்கி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதேநேரம் திமுக அதிமுக கூட்டணியில் இணையாது என்பதை அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக - தவெக நெருக்கம் காட்டி வருவதாக சொல்லப்படும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசியல் களமும் இப்போது வித்தியாசமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நீண்டகால கூட்டணி கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் பிரிந்தன. காங்கிரஸ், விஜயுடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுகவிலும் அதில் இருந்து விலகிய 6 எம்எல்ஏக்கள் விஜய் தலைமையிலான கட்சியில் இணைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர்.
என்ன நடந்தது
மேலும், சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைக்க முயன்றதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும், இதனை அப்போதே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மறுத்திருந்தார். அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றார். அதேநேரம் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி
தவெக- அதிமுக பேச்சுகள் இருந்தாலும் கூட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் தற்போதைய விஜய் அரசு ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாள தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.


Click it and Unblock the Notifications
