பயந்து ஒதுங்கியவர் பன்னீர்.. தைரியமாக எதிர்கொண்டவர் எடப்பாடி.. ஏன் ஆதரவு?- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பளிச்!
சென்னை : அதிமுகவில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பகிரங்கமாக பொதுவெளிகளில் விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு குறைந்து வருவதற்கு, அவரது கடந்த கால செயல்பாடுகளே காரணமாகக் கூறப்படுகின்றன.
மாறாக, எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையில் 4 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக கொண்டு சென்றதால் தொண்டர்கள், நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

அதிமுக மோதல்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரை பகிரங்கமாக பொதுவெளிகளில் விமர்சித்துப் பேசி வருகின்றனர். பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு முன்பே அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி மோதல் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஓபிஎஸ்ஸுக்கு குறைந்த ஆதரவு
தற்போதைய நிலையில் பெருவாரியான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர். இன்று கூட 3 மாவட்ட செயலாளர்கள் ஓ.பி.எஸ் பக்கமிருந்து எடப்பாடி பக்கம் தாவியுள்ளனர். 9 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. எதிரிகளை எடப்பாடி பழனிசாமியே திறம்பட கையாள்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பன்னீரின் முயற்சிகள் தோல்வி
சசிகலா மீது குற்றம்சாட்டி தர்ம யுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு, ஆட்சியையும், கட்சியையும் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்பட முடிவெடுத்தார். ஆனால், சமீபகாலமாக ஓ.பி.எஸ், சசிகலா வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி வருவது அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரோகி எனக் குற்றம்சாட்டிய சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கத் துடிப்பது ஓ.பி.எஸ் மீது அவரது ஆதரவாளர்களே நம்பிக்கை இழக்கும் சூழலுக்குத் தள்ளியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை இதற்காகவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பயந்து ஒதுங்கினார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை. மிரட்டுகிறவர்களுக்கு பயந்து பதவியை விட்டு விலகினால், இயக்கத்தை எப்படி வழிநடத்த முடியும்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன. அதனை அவர் தைரியமாக எதிர்கொண்டார். பெருந்தன்மையுடன் அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை அமைக்க வழிவிட வேண்டும் எனப் பேசியுள்ளார்.

சிம்ம சொப்பனம்
கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுகவைச் சேர்ந்த அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. அதிமுகவை எதிர்க்க யாருக்கும் திராணியில்லை. விரைவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பேசியுள்ளார். இப்படி எடப்பாடி தரப்பினர் ஓ.பி.எஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசி வருவது கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வத்தின் பிடி தளர்வதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications