டிடிவி தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி பழனிசாமி – அமமுகவுக்கு க்ரீன் சிக்னல்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து வெற்றி பெற அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தது சர்ச்சையான நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். திமுகவை எதிர்க்க பலமான கூட்டணி அமைக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அதிமுகவில் உள்ள பிரச்னைகளையும் அவர் சரி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ஒன்று அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், அமமுக குறித்து மனம் திறந்துள்ளார்.

இபிஎஸ் சுற்றுப் பயணம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக பலமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
ஏமாளி இல்லை
அதில் பரபரப்பான பல கருத்துகளையும் முன் வைத்து வருகிறார். "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி இல்லை..", "எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி இணைய இருக்கிறது." என்று எடப்பாடி கூறிய கருத்துகள் அரசியலில் விவாதமாக மாறியுள்ளது. மேலும் அவர் ஊடகங்களுக்கு பிரத்யேக பேட்டியும் அளித்து வருகிறார். பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.
நேரடி அழைப்பு
அதில் கூட்டணி குறித்து அவர் மனம் திறந்திருந்தார். தவெகவுடன் தற்போது வரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் திமுக எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார் என்று கூறியிருந்தார். திமுகவை எதிர்க்கும் தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடி அழைப்பு விடுத்திருந்தார். மற்றொரு நேர்காணலில் அவர் அமமுக குறித்து பேசியுள்ளர்.
காலம் பதில் சொல்லும்
எடப்பாடி பழனிசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நெறியாளர், "அதிமுக தேர்தல் கூட்டணியில் அமமுக இணையுமா?" என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "காலம் பதில் சொல்லும்." என்று பதில் அளித்தார். நெறியாளர் மீண்டும் "உங்களுக்கு அதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா?" என்று கேட்க, எடப்பாடி பழனிசாமி மீண்டும், "காலம் பதில் சொல்லும்." என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
காலம் கடந்துவிட்டது
நெறியாளர் ஓபிஎஸ் அணியினர் காலில் விழுகிறோம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்களே. ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்டார். இதற்கு இபிஎஸ், "ஓபிஎஸ் விவகாரத்தில் காலம் கடந்துவிட்டது." என்று பதில் அளித்தார். "ஓபிஎஸ்ஸை கூட்டணி கட்சியாக ஏற்பீர்களா." என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "காலம் கடந்துவிட்டது. அவர் எங்கு புது கட்சி தொடங்கினார்கள். எங்கள் இயக்க பெயரை தானே பயன்படுத்தி, எங்களை தானே எதிர்த்து கொண்டு வருகிறார்." என்று பதில் அளித்துள்ளார்.
மறுப்பு
அதிமுகவில் பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் பரவலாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வந்தார். அதிமுகவின் ஒற்றை தலைவராக தன்னை மட்டுமே அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார்.
கிரீன் சிக்னல்
இந்நிலையில் திடீரென அவர் அமமுக மற்றும் டிடிவி தினகரன் விஷயத்தில் இல்லை என்று சொல்லாமல், ஆம் என்று ஆமோதிப்பது போல பதில் அளித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அண்மையில் தான் டெல்டா பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சசிகலா, தினகரனை மீண்டும் சேர்த்துக் கொண்டால் அங்கு அதிமுக சற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூடப்பட்ட கதவுகள்
அதேநேரத்தில் என்ன ஆனாலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பே இல்லை, என்று அவருக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தங்களை அதிமுகவுக்குள் இணைத்துக் கொள்ள சொல்லி கெஞ்சிய நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications