அவர் அதிமுக வேட்பாளரே இல்ல.. கர்நாடகாவில் நடந்த ‘ட்விஸ்ட்’ ஷாக்.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளரின் வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் : வேட்பு மனு பரிசீலனையின் போது புலிகேசி நகரில் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம் காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் ஆனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
அதில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக வேட்பாளராக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
எடப்பாடி அதிரடி முடிவு : இது தொடர்பாக அதிமுக சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேட்பு மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications