பிரச்சனையை சந்திக்கும் திறன் கூட விஜய்க்கு இல்லை.. இவரா மக்களுக்கு நல்லது செய்வார்? எடப்பாடி அட்டாக்
சென்னை: ஒரு பிரச்சனை நடந்தால், அதனை சந்திக்கும் திறன் கூட விஜய்யிடம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். விஜய்யால் தனது கடமையை கூட செய்யவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, 70 நாட்களாக ஒரு கட்சித் தலைவர் வெளியில் வரவில்லை என்றால், மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகையில், கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லைதான். கட்சியை தொடங்கிய அண்ணா, எம்ஜிஆரை மறந்தது. கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது.

அவர்கள் பேசியதையும், பின்பற்ற வேண்டும் என்று கூறிய அனைத்தையும் மறந்துள்ளீர்கள் என்று விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி செல்ஃப் எடுக்கவில்லை என்பதையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதேபோல், விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா.. என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்று தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் விஜய்யின் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய்க்கு என்ன தெரியும்.. ஒரு பிரச்சனை நடந்த போது 72 நாட்களாக விஜய் வெளியில் வரவில்லை. விஜய் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.. ஏன் கேட்கிறார்கள் என்று பேசுகிறார்.
ஒரு கட்சித் தலைவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்றால், கேட்கத்தான் செய்வார்கள். அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். கட்சி தொடங்கிவிட்டால், மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அவரின் கடமை. விஜய் ஒருநாளும் அந்த கடமையை செய்ததே இல்லை. 15 நாட்கள் அலுவலகத்தையே மூடிவிட்டார்கள்.
இவர்களா கட்சித் தொடங்கி மக்களுக்கு நன்மை செய்யப் போகிறார்கள்? யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.. இந்தியா ஜனநாயக நாடு.. மக்கள் தீர்ப்பே இறுதியானது.. மக்களுக்கு அதிமுக ஏராளமான விஷயங்களை செய்திருக்கிறது. நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் சொல்வோம் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அட்டாக் அதிமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications