101 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில், அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி, எஸ்.ஆர்.விஜயகுமர் உள்ளிட்டோர் டெபாசிட்டை இழந்திருக்கின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பல்வேறு அதிர்ச்சியையும், ஆச்சரியங்களையும் வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணி ஆட்சியை விஜய் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தவெக தலைவர் விஜய் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளார். அதிமுக தரப்பில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பின், அதிமுக அடையும் 11வது தோல்வியாகும். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக போட்டியிட்ட தொகுதியில் 101 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் தொகையை இழந்தார்.
அதேபோல் அதிமுக சார்பாக போட்டியிட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார். மாதவரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மூர்த்தி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதி ராஜாராம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜி ராஜசேகரன், மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் டெபாசிட் தொகையை இழந்திருக்கின்றனர்.
கம்பம் தொகுதியில் போட்டியிட்ட ஜக்கையன் உள்ளிட்ட பலரும் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார். லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 22% வாக்குகளை பெற்ற நிலையில், இம்முறை 21.21% வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணி பெற்ற 18% வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு திரும்பவில்லை. இதனால் அதிமுக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் டெபாசிட்டை இழக்க வேண்டிய சூழல் நேரிட்டது.













Click it and Unblock the Notifications