கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை.. எடப்பாடி பழனிசாமியின் 3ம் கட்ட சுற்றுப்பயணம்.. அதிமுக அறிவிப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3வது கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 2வது கட்டமாகத் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூழலில், 3வது கட்ட சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஓராண்டுக்கு முன்பாகவே தொகுதி வாரியாக தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஜூலை 7ஆம் தேதி தொடங்கி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கோவில்பட்டி பகுதியில் மக்களைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 3வது கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு செய்ய உள்ளார். அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு தொகுதியிலும், ஆகஸ்ட் 12ஆம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு தொகுதியிலும், ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர், வேலூர் புறநகர்ப் பகுதிகளில் மக்களைச் சந்திக்க உள்ளார்.
இதன்பின் ஆகஸ்ட் 15ல் திருவண்ணாமலை மத்திய மற்றும் வடக்கு தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார். அதேபோல் ஆகஸ்ட் 16ல் திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை கிழக்கு ஆகிய தொகுதிகளிலும், ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வேலூர் புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைச் சந்திக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 19ஆம் தேதி வேலூர் மாநகர், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதேபோல் ஆகஸ்ட் 20ஆம் தேதி ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை கிழக்கு பகுதிகளிலும், ஆகஸ்ட் 21ல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஆகஸ்ட் 22ல் செங்கல்பட்டு மேற்கு மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 23ல் சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications