டிவியில் முகம் வரனும்னு பேசுவாரு.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலையே இல்லை! முதல்வர் ஸ்டாலின் சுளீர்
சென்னை: மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிலையில் அவருக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று சேலம் பூலாம்பட்டி செல்லும் சாலையில் மேல்சித்தூரில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,” தமிழகத்தில் பேருந்தை நம்பி மக்கள் யாரும் ஏறமுடிவதில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகள் பெரும்பாலும் கண்டமான பேருந்துகள். பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்புதான்.
அது மக்களுக்கான நலத்திட்டம் இல்லை. பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதாக பேசும் முதல்வர் ஸ்டாலின் மாதமாதம் கடனை வாங்கிதான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். இந்த கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனு வாங்கினார். ஆனால் தற்போது அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை. அத்தனையும் ஏமாற்று வேளை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். ” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை.
இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம்.
மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டி.வி-யில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.
ஒன்றிய அமைச்சருடன் மெட்ரோ இரயில் நிறுவனத்தில் இன்றைக்கு ஆய்வு நடந்திருக்கிறது. ஏற்கனவே ஒன்றிய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் இன்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.












Click it and Unblock the Notifications