கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரி எவ்வளவு உயர்வு.. குற்றச்சாட்டும்.. அரசின் விளக்கமும்.. பாருங்க
சென்னை: ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ. 500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300ம், ஓலை வீடுகளுக்கு ரூ. 200ம் வீட்டுவரி வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரிகளை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இந்த வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிரக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த ஸ்டாலின் மாடல் அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு / ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறது.

கட்டணம் உயர்வு
2021-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள், கழிவுநீர் அகற்றல் கட்டணம் மற்றும் மின் கட்டணங்கள் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்வு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று அனைத்துத் துறைகளிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று அதிகரித்து வரும் ஊழல். இதன் காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுதான் 48 மாதகால அலங்கோல ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியின் வேதனைகளை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
புதிய வீடுகள்
இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.

எவ்வளவு உயர்வு
மேலும், 2024-2025ஆம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ. 44-ம், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ. 66-ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ. 121-ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி ரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ. 500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300ம், ஓலை வீடுகளுக்கு ரூ. 200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். ஆனால், திமுக அரசோ, ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுதான், இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் சாதனை.
ஆன்லைன் சேவை
கடந்த 2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவையை அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டு வரி உயர்வு
கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மாடல் அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பழனிசாமி பொய்கள்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேஎன் நேரு, "ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது'' என வழக்கம் போலவே 'பச்சைப் பொய்' பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடும் அறிக்கைகள் ஒவ்வொன்றும் அவருக்கே பாதகமாக முடிகிறது. அதில், இன்றைய வரவு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் அறிக்கை.
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதைச் சற்று உணராமல் ஒன்றிய பாஜக அரசு கைநீட்டிய இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதன் விளைவால்தான் நாம் ஒன்றிய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம். ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 'மொத்த மாநில உற்பத்தி வளர்ச்சிக்கு (GSDP) நிகராக நகர்ப்புறச் சொத்துக்களின் வரிகளை உயர்த்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை (Grants to Urban Local Bodies) பெற வேண்டுமெனில் சொத்துவரியை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சொத்துவரி வசூலில் வளர்ச்சியைக் காட்ட வேண்டும்' சொன்னது. 'சமீபத்திய 5 ஆண்டுகளின் மாநில மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் சொத்துவரி வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விடுவிக்கப்படும்' என்ற நிபந்தனையை 15-ஆவது நிதிக்குழு விதித்தது.
15வது நிதியாணை குழு
ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைப்பிடிக்காத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றிய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அம்ரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மோடி அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-ஆவது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது தங்களுடைய சுயநலத்துக்காக ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டவர்தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வந்தது.
தலையில் இடி
உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதன் மூலம் ஒவ்வொரு சாமானிய மக்களின் மீதும் தலையில் இடியை இறக்கினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார். அதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் எந்தத் தடையுமின்றி அந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகப் பல்லாயிரம் கோடி ஊழல்களையும் முறைகேட்டையும் செய்து கல்லா கட்டியவர்தான் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி. அதற்குத் துணை போனவர்தான் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கையெழுத்து போட்டது யார்
திராவிட மாடல் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தியது. அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளை ஒழுங்குபடுத்தி கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எடப்பாடி பழனிச்சாமி மோடி அரசின் அடிமையாகி கையெழுத்து போட்டதால், 15-ஆவது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியது. அதனால், வேறுவழியின்றித் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழைகள் பாதிக்காத வண்ணம் மிக மிகக் குறைந்த அளவு சொத்து வரியை விதிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்காத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிக மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக எதிர்ப்பு ஏன்?
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 30 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதால்தான் சில நூறு ரூபாய் மட்டும் வரியாகக் கட்டி வந்த மக்கள் ஆயிரங்களில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. வரி விதிக்கக் காரணமானவரே சொத்து வரி உயர்வைப் பற்றி ஒப்பாரி வைக்கிறார். அதையெல்லாம் மறந்துவிட்டு திராவிட மாடல் அரசின் மீது களங்கம் கற்பிக்க அவதூறுகளை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
கோயபல்ஸ்ஸையே ஓவர் டேக்
ஒன்றிய அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-ஆவது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களோடு நட்புறவில் இருந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது தானும் தனது ஒன்றிய பாஜக எஜமானர்களும் சேர்ந்து செய்த துரோகத்தை மூடி மறைக்க மட்டுமே. பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், இறுதியில் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற கோயபல்ஸ் கோட்பாடு போல, பழனிசாமி சளைக்காமல் திரும்பத் திரும்ப ஒரே பொய்யைப் பேசி அதை உண்மையாக்க முயல்வதில் கோயபல்ஸ்ஸையே ஓவர் டேக் செய்து, வாழும் கோயபல்ஸ் ஆக மாறியிருக்கிறார்.
நீலிக் கண்ணீர்
சொத்துவரி உயர்வுக்குக் காரணம் திமுக அரசுதான் என்ற பொய்யை இன்னும் எத்தனை காலம் பேசிக்கொண்டிருக்கக் போகிறீர்கள் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரியைத் தமிழ்நாடு முழுவதும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்துவரி 1.4.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் மக்களிடம் இருந்து உயர்த்தப்பட்ட சொத்து வரியை வசூலித்தார்கள்.
வேலுமணி பேட்டி
2019 நவம்பரில் பேட்டி அளித்த அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ''சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' எனச் சொன்னார். 'தற்காலிகம்' என்றால் அந்தச் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய முடியாது என்று அர்த்தம். அவர்களே அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு, இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி.
அதிமுக அரசு
2018 ஜூனில் சட்டசபை கூட்டத்தொடரில், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில், 'உரிய காலத்திற்குள் சொத்துவரியைக் கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை. 4-ஆவது மாநில நிதி ஆணையம், சொத்து வரியைக் காலம் தாழ்த்திச் செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, அதை ஏற்பது என முடிவு செய்துள்ளது' என்று வேலுமணி கூறினார். அன்றைக்கு மாநில நிதி ஆணையம் சொன்னதை ஏற்றுக் கொண்ட அதிமுகதான், இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்கு ஓலம் இடுகிறது.
அம்பி, ரெமோ என இரட்டை வேடம்
சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய ஒன்றிய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு நிதி வேண்டும் என்றால் வரியை உயர்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி அரசு போட்ட கையெழுத்தால் கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு. வரியை உயர்த்த உண்மையான காரணத்தை மு.க.ஸ்டாலின் அரசு சொன்னால் திசை திருப்பும் வகையில் பொய் அறிக்கை வெளியிடுகிறது அதிமுக. ஆட்சியில் இருந்த போது ஆதரித்து கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போட்டு அந்நியன் படத்தில் வரும் வசனம் போல 'பின்றியே' என்றுதான் பழனிசாமியை சொல்லத் தோன்றுகிறது" என கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications