ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி
சென்னை: மின்துறை தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் சந்தேகம் எழுப்பியுள்ளார். டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த சம்பவத்தின் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்! என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தான் மின்சாரத் துறை தொடர்பான அனைத்து ஆவணங்களும் கணினிகளில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிநிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2021 - 2023 ஆம் ஆண்டு வரை 45,800 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்குகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த மாதம் 20 ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் விளக்கம்
இது குறித்து மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மின்வாரியத்தில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஒப்பந்த ஊழியர் ஒருவர்தான் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பென்ஷன் பிரிவிலும் சில டிஸ்குகளை அந்த ஊழியர் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அதன் அசல் பிரதி (ஹார்ட் காப்பி) மின்வாரியத்தில் பேப்பர் வடிவில் பாதுகாப்பாக இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications