சசிகலா காலில் விழுந்தது தப்பா? 3-வது மனுஷன் காலிலா விழுந்தேன்?எடப்பாடி பழனிசாமி முதல் முறை விளக்கம்!
சென்னை: சசிகலா காலில் தாம் விழுந்ததில் தவறும் இல்லை; 3-வது மனிதர் ஒருவரது காலில் விழவும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. மதுரையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சூழ்ந்லைக்கு ஏற்ப கூட்டணிகள் வைக்கின்றன. யாரும் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை. திமுகவினர்தான் கள்ள கூட்டணி என விமர்சிக்கின்றனர்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் திட்டமிட்டே முதல்வர் ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அவதூறு பிரசாரம் செய்கின்றனர். தோல்வி பயத்தால்தான் இப்படி பேசுகிறார்களோ என்கிற சந்தேகம் உள்ளது.
ஒரு கூட்டணியில் இருந்தோம்.. கடைசி நேரத்தில் அந்த கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டு என்ன பேசுவது? அண்ணா திமுக கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கிற கட்சி. திமுக மாதிரி நாங்கள் இல்லை. அதே நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியே வந்த உடன், தவறு செய்தால் உடனடியாக கேட்போம்.
சசிகலா காலில் விழுந்த படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டங்களில் காட்டி வருகிறார். அவர் படத்தைக் காட்டட்டும். பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தப்பா? வேற யார்கிட்டயும் 3-வது மனுஷன் காலில் விழலையே.. உங்களை மாதிரி வீரவசனம் பேசலையே.. வெளியே பிரதமரை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். கறுப்பு குடை பிடித்தால் கோபித்துக் கொள்வார் என வெள்ளை குடை பிடித்தவர்கள் திமுகவினர். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அப்புறம் ஓடோடிப் போய் தமிழ்நாட்டு திட்டங்களை தொடங்கி வைக்க அழைக்கிறது.. அங்க சரணாகதி.. இங்க வீரவசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
தேர்தல் களத்தில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் ஓட்டுப் போடுவது மக்கள்தான். காலம் மாறிவிட்டது. அன்று மிட்டா, மிராசுதார் அரசியலில் இருக்க முடியும். சாதாரண கிளைச் செயலாளர் நான் இன்று பொதுச்செயலாளர்; முதலமைச்சராகவில்லை. மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications