எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி- அதிமுக குடுமியை கைப்பற்றிய தேர்தல் ஆணையம்.. இனி 'டெல்லி' ஆட்டம்!
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்திருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாகும். அதிமுக விவகாரத்தில் இனி தேர்தல் ஆணையம் மூலமாக 'டெல்லி' ஆட்டம் தொடங்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் பாஜக வலிமையாக காலூன்றுவதற்கு 'ஒருங்கிணைந்த அதிமுக' என்ற கூட்டணி தேவையானதாக இருந்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் இணைப்பதற்கு தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் ஒன்றுபட்ட அதிமுகவாக விஸ்வரூபம் எடுக்க முடியாமல் அக்கட்சி தவித்து வருகிறது.

வலிமையான கூட்டணிக்கு போராடும் பாஜக
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைத்தாக வேண்டிய நெருக்கடியில் பாஜக இருக்கிறது. ஒருங்கிணைந்த அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக மற்றும் இதர சிறு கட்சிகளை கொண்ட மெகா கூட்டணிதான் தங்களுக்கு பலமாக இருக்கும் என்பதே பாஜகவின் வியூகம். இதனையே பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்தும் வருகின்றனர்.
ஒரே அதிமுகவுக்கு முட்டுக்கட்டையான இபிஎஸ்
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ, தேர்தல் ஆணையம்- நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தங்களுக்குதான் சாதகமாக இருக்கிறது; அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தங்களை அசைக்கவே முடியாது என நம்பிக் கொண்டே இருந்தது. இதனால் ஒருங்கிணைந்த அதிமுக என்ற வியூகத்துக்கு முட்டுக்கட்டையும் போட்டுக் கொண்டே இருந்தது.
எடப்பாடி மனு டிஸ்மிஸ்
இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இடைவிடாமல் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. ஒருகட்டத்தில் இந்த விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆடிப் போன எடப்பாடி பழனிசாமி தரப்பு, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்துவிட்டது.
இனி தேர்தல் ஆணையம் விசாரிக்கும்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அக்கட்சியின் விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் அதிமுகவின் குடுமி மட்டுமல்ல.. அதிமுகவின் அசைக்க முடியாத பொதுச்செயலாளர் தாமே என கூறி வந்த எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலமும் இந்திய தேர்தல் ஆணையம் வசமாகிவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் பிடியில் அதிமுக
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அதிமுக வழக்கு விவகாரம் தேர்தல் ஆணையத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. இனி டெல்லி பாஜக மேலிடம், தமக்கான வியூகங்களை தேர்தல் ஆணையம் மூலமே செயல்படுத்த முனையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நெருக்கடி?
அதாவது ஒருங்கிணைந்த அதிமுக முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தால், அவரிடம் இருந்து பொதுச்செயலாளர் பதவி பறிபோகும் நிலைமையை தேர்தல் ஆணையம் உருவாக்கலாம்; செங்கோட்டையன் போன்றவர்கள் புதிய பொதுச்செயலாளராக்கப்பட்டு ஒருங்கிணைந்த அதிமுக என்ற வியூகம் செயல்படுத்தப்படலாம் எனவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் தமிழக அரசியலில் அடுத்தடுத்து புதிய பரபரப்புகள் தொடரும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications