கண் கலங்குறேன்.! அறிக்கையில் அல்ல..உண்மையிலேயே எடப்பாடி அப்செட்! சீனியர்கள் மேல் தான் செம காண்டாம்!
சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தாலும், வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்கள் ஆறுதல் தேடி வருகின்றனர் அதிமுகவினர். ஆனால் சில தொகுதிகளில் டெபாசிட் போய், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சி சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவை கடந்த சில மாதங்களாக சூழ்ந்திருந்த அரசியல் புயல் சற்றே ஒய்ந்திருக்கிறது. பாஜக மக்களவை தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. ஆனால் கடந்த 2 முறைகளை போல் தற்போது தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதன் காரணமாக நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்ற கூட்டணி கட்சி தலைவர்களை நம்பியே ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. கடந்த காலங்களில் கூட்டணியை நம்பி ஆட்சியை இழந்த பிரதமர்களின் வரலாறும் உண்டு.
எடப்பாடி பழனிசாமி: இது ஒருபுறம் இருக்க அதிமுக தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. 2019 மக்களவை தேர்தல், 6 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத் தேர்தல், தற்போது மக்களவை தேர்தல் என எடப்பாடி தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சியை தோல்வியடையச் செய்திருக்கிறார்.
படுதோல்வி: இதனால் அவர் மீது ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. சில தொகுதிகளில் டெபாசிட் போய், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சி சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. திருவள்ளூர், தூத்துக்குடியில் டெபாசிட் போன நிலையில், முன்பு பலமாக இருந்த கோவை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தொகுதிகளில் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
சீனியர்கள் மீது அதிருப்தி: இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக ”தேர்தலுக்காக உழைத்த தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என கண்கலங்குகிறேன்” என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே அதைப்போலவே எடப்பாடி தற்போது கண் கலங்கும் நிலையில் இருப்பதாகவும், குறிப்பாக சீனியர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னடைவு: பல தொகுதிகளில் ஏற்கனவே நிர்வாகிகள் கட்சி பணியாற்றாததால் பின்னடைவை சந்தித்ததாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார். அடுத்து கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குள்ளாக தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டது. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கூட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை, திண்டுக்கல், திருவள்ளூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட அதிமுக வலுவாக இருந்த பகுதிகளில் மூன்றாம் இடத்துக்கும் டெபாசிட் இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டதற்கு அங்கு இருக்கும் நிர்வாகிகளின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறப்படுகிறது.
காரசார விவாதம்: சரியான வேட்பாளர்களை தேர்வு செய்தது, கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதது, தேர்தல் செலவுக்கு தலைமை கொடுத்த பணத்தை கூட முறையாக பட்டுவாடா செய்யாதது என பல பிரச்சினைகள் காரணமே இந்த தோல்வி ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவினர். இதனால் சீனியர்கள் மேல் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இப்போதைக்கு ஏதாவது பேசினால் அது விவகாரத்தில் கொண்டு போய்விடும் என்பதால் அமைதியாக இருப்பதாகவும் அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் இது தொடர்பாக காரசார விவாதங்கள் நடக்கும் என்கின்றனர் கட்சியை உற்றுநோக்கும் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications