அமெரிக்க அதிபராக கூட ஆகலாம்.. அடுத்த பிரதமர் விஜய்! படக்கென பதில் சொன்ன மாஜி சிஎம் எடப்பாடி பழனிசாமி
கோவை: "அடுத்த பிரதமர் விஜய்" என்ற பரப்புரை செய்யப்படுகிறது. விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம் என்றும், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் உள்ளது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும். சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும். சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார். அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது. அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும் அதன்படி செயல்படுவதில்லை.
சட்டம் ஒழுங்கு
நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளோன். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதற்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை பார்ப்போம். தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது.
நிர்வாக சீர்கேடு
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
தவெக ஆட்சி
தமிழகத்திற்கு ஏற்கனவே அதிக அளவில் கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதால் அதற்கேற்ப கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது. இந்த தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.
மின் உற்பத்தி
மின்சாரத்துறையில் ஏற்கனவே 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் உற்பத்திக்காகவும், மின்பாதை அமைப்பதற்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அனல் மின் நிலையங்களை முழுமையாக அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்று தொடர்ச்சியான இலவச திட்டங்களை அறிவிக்கவில்லை. தேவையான ஒரு பகுதியை மட்டுமே அறிவித்தது. தற்போதைய அரசு தொடர்ந்து செலவினங்களை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வருகிறது. அதனை சமாளிக்க தொடர் வருவாய் இருக்க வேண்டும்.
போக்குவரத்துத்துறையில் பழைய பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என அதிமுக ஆட்சிக்காலத்திலேயே வலியுறுத்தினோம்.
அரசு பேருந்துகள்
விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் என இருந்ததை, நிதி பற்றாக்குறை காரணமாக 5 ஆண்டுகள் மற்றும் 7 லட்சம் கிலோமீட்டர் என மாற்றியுள்ளனர். ஏற்கனவே ஆயுட்காலம் முடிந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கினால் எப்படி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்க முடியும்.
லஞ்ச ஒழிப்புத்துறை
இந்த அரசு போக்குவரத்துத்துறையில் ஆயிரம் பேருந்துகள் வாங்கியதாக கூறியுள்ளது. மாநகரப் போக்குவரத்திற்காக வாங்கப்பட்ட மின்சார பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. தெரிவித்தார். இந்த ஆட்சியில் திட்டமிடாத செயல்பாடுகளே காணப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். சோதனை நடைபெற்ற இடங்களிலேயே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால், சோதனை நடைபெறாத இடங்களில் எவ்வளவு இருக்கும். தமிழகம் முழுவதும் ஊழல் நடைபெற்று வருகிறது.
பிரதமர் விஜய்
"அடுத்த பிரதமர் விஜய்" என்ற பரப்புரை செய்யப்படுகிறது. விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம் என்றும், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது.
எண்டிஏ கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதுகுறித்து பார்க்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications
