எடப்பாடி பழனிசாமி சேலம் 7 ஏக்கர் தோட்டத்தில் “ஷாக்” அடித்த மின் வயர்கள்.. ஆக்ஷனில் தவெக அரசு
சேலம்: சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான தோட்டத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாரின் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் பேரவையில் சுட்டிக்காட்டியிருந்தார்.. இப்போது அது தொடர்பாக ஆக்ஷன் ஆரம்பமாகி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர் கோவிந்தராஜனுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் தோப்பு உள்ளது. இந்தத் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தோட்டம்
இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டாரின் வயர்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், மின்மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த வயர்களை வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதனால் மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பேசினார். காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், விவசாயிகளின் தோட்டங்களில் மின் வயர்கள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து திருடப்படுவதாக கூறினார்.
சட்டப்பேரவையில் காட்டிய ஆதாரம்
தனது சொந்த தோட்டத்திலேயே மின் வயர்கள் திருடப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். "சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையத்தில் எனது தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மின் மோட்டாரில் இருந்த மின் வயர்களை அறுத்து எடுத்துச் சென்றுவிட்டனர். இதை நான் எங்கு போய் சொல்வது?" என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்ல, மின் வயர்கள் திருடப்பட்டதற்கான போட்டோ ஆதாரத்தையும் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் காட்டினார். "எனக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால் மக்களுக்கு எப்படி இருக்கும்?" என்று கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளின் மின் வயர்கள் மற்றும் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது துணை சபாநாயகர் ரவிசங்கர் நகைச்சுவையாக பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது. உடனே இதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதை அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டாம்... இது அவைக் குறிப்பில் வந்துவிடும். லைவ்லேயும் போயிட்டு இருக்கிறது" என்றார்.
சேலம் எடப்பாடி ஸ்டேஷனில் புகார்
இதனிடையே, இந்த ஒயர் திருட்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் கோவிந்தராஜன் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தோட்டத்தில் மின் வயர்களை வெட்டி திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்தப் பகுதியில் இதுபோலவே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதா, மின் வயர்களை திருடியவர்கள் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரிக்க துவங்கியிருக்கிறார்கள்.. மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்...!!!


Click it and Unblock the Notifications
