இன்னோவாவுக்கு டாட்டா.. புதிய டிபெண்டர் காரில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி! விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாகவே புதிய காரில் வலம் வருகிறார். முன்பு இன்னோவா காரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிய டிபெண்டர் காரில் வருகை தருகிறார். தற்போது எடப்பாடி பழனிசாமி வரும் சொகுசு காரான டிபெண்டர் காரானது ரூ.1.5 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. சன் ரூப், ரியர் கேமரா, வைஃபர் உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் உள்ளது.
தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாயும் இந்த சொகுசு காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

டிபெண்டர் காரில் வலம் வரும் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த பல ஆண்டுகளாக இன்னோவா காரையே பயன்படுத்தி வந்தார். முதல்வராக இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் சரி இன்னோவா காரையே பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இன்னோவா காருக்கு பதிலாக ரூ.1.5 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வருகிறார்.
கடந்த வாரம் திருப்பதிக்கு எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது டிஃபெண்டர் காரில் எடப்பாடி பழனிசாமி வந்து இறங்கினார். அதன்பிறகு சென்னை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து இந்த காரையே எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வரும் டிஃபெண்டர் காரின் விலை, சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
காரில் உள்ள அம்சங்கள்
எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தும் புதிய கார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் எக்ஸ் மாடல் ரகமாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.1.44 கோடி. 0 டூ 100 கி.மீ வேகத்தை வெறும் 6.4 செகண்டில் எட்டும் திறன் கொண்டது. வாகனத்தை சுற்றிலும் 360 டிகிரி கோணத்தில் பார்க்க கூடிய நவீன கேமரா வசதி வாகனத்தில் உள்ளது. இந்த காரில் 5 பேர் பயணிக்க முடியும்.
சன் ரூப், ரியர் கேமரா, வைஃபர் உள்ளிட்டவையும் உள்ளன. தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மு.க ஸ்டாலின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தற்போது விலை உயர்ந்த சொகுசு காரை பயன்படுத்தி வரும் நிலையில் அந்த வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி புதிய காரில் வருகை தந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் பலரும் காரின் முன்னால் நின்று கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. தமிழக முதல்வர் விஜய் ஒரு கார் பிரியர் ஆவார். அவரிடம் லெக்ஸஸ், பிஎம்டபிள்யூ, ஐ7, டொயோட்டா வெல்ஃபைர், ரேஞ்ச் ரோவர், ஆடி, வால்வோ உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு
எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னிடம் அசையும் சொத்து ரூ.50 லட்சம் உள்ளதாகவும், அசையா சொத்து எதுவும் இல்லை, தன் பெயரில் விவசாய நிலம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். அவரது மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துக்களும், 2.16 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.




Click it and Unblock the Notifications
