எகிறிய முட்டை விலை.. புதிய உச்சம்.. 55 ஆண்டு கால நாமக்கல் பண்ணை வரலாற்றில் உச்சபட்ச விலை!
சென்னை: முட்டை விலை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் கோழிப் பண்ணைகள் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் முட்டை விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூபாய் 6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6.20 ஆக உயர்ந்துள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது. சில்லறை விலையில் 1 முட்டை ரூபாய் 8 வரை விற்க வாய்ப்புள்ளது. இந்த லேட்டஸ்ட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளில் கேக், பிஸ்கட், பேக்கரி வகைகள், இனிப்புகள் தயாரிப்பதில் முட்டை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால், அதன் தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications