El Nino: பசிபிக் கடலில் புதிய உச்சம் தொட்ட வெப்பம்! இந்தியாவில் பருவமழையில் தாக்கம் இருக்குமா?
சென்னை: பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பம் 30 டிகிரியை எட்டிவிட்டதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக தரவுகள் தெரிவித்துள்ளன. இதுவரை பதிவான வெப்பத்தில் இதுதான் உச்சபட்ச வெப்ப நிலை என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டும் என்றும்டிசம்பர் மாதத்தில் 'எல் நினோ' தனது உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான இந்த வெப்ப நிலை உயர்வால் எல் நினோ தாக்கம் என்பது தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. எல் நினோ தீவிரம் அடைந்து வருவதால், உலக அளவில் தட்பவெப்ப நிலை மாறும்.

இதுதான் உச்சபட்ச வெப்ப நிலை
புயல்கள், பெருமழை, கடும் வறட்சி இயல்பு சூழலை மொத்தமாக மாற்றக்கூடும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதி பூமத்திய ரேகை பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம், 30 டிகிரி செல்சியை தொட்டுள்ளது. எல் நினோவை டிராக் செய்ய இந்த பகுதியைத்தான் விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவது வழக்கம்.
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகளின்படி, கடலின் மேற்பரப்பு வெப்பம் 30 டிகிரியை எட்டிவிட்டதாம். இதுவரை பதிவான வெப்பத்தில் இதுதான் உச்சபட்ச வெப்ப நிலை என்றும் கூறப்படுகிறது. எல் நினோ காலநிலை நிகழ்வு தொடர்ந்து வலுவடைந்து வரும் சூழலில் வரலாறு காணாத புதிய வெப்பம் பதிவாகியுள்ளது. இது அடுத்த ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
டிசம்பரில் உச்சத்தை எட்டும்
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டும் என்று உலக வானிலை அமைப்பும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 'எல் நினோ' தனது உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் வெப்பம் இயல்பை விட 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பது 'எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது. பசிபிக் கடலின் மேற்பரப்பில் வெப்ப நிலை அதிகரிப்பது எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இந்த எல் நினோ பருவமழையின் போக்கையே மாற்றக்கூடிய தன்மை கொண்டது. இரண்டு முதல் 7 ஆண்டுகள் இடைவெளியில் இது ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எல் நினோ ஏற்பட்டால் 12 மாதம் முதல் 18 மாதம் வரை நீடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முந்தைய நிலை லா நினோ என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல, கடலின் வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது சூப்பர் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூப்பர் எல் நினோ உருவெடுத்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3.7°C வரை உயரக்கூடும்
பசிபிக் கடலில் தற்போது வெப்ப நிலை உயர்வு 3 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் நிலையில் சூப்பர் எல் நினோவின் ஆரம்ப கால கட்டம் துவங்கியுள்ளதாக, வானிலை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். சூப்பர் எல் நினோ தீவிரம் ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத பெருமழை, கடும் வறட்சி என கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெப்பநிலை இயல்பை விட சுமார் 3.7°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, நவம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரையிலான காலத்தில் பதிவான முந்தைய அதிகபட்ச வெப்ப நிலையை விட 2.6°C-ஐ விட அதிகமாகும்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு
எல் நினோ தீவிரம் ஆகி வருவது, இந்தியாவில் பருவமழை குறித்த கவலைகளையும் வெப்ப நிலை அதிகரிப்பது குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் பற்றாக்குறையாக பெய்தது. இந்தியாவின் தட்பவெப்ப நிலை மாற்றத்தை எல் நினோ மட்டுமே நிர்ணயிப்பது இல்லை. பிற கிளைமேட் நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் சூழல்களும் மழை மற்றும் வெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனினும், பசிபிக் கடலில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப நிலை உயர்வது மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.





Click it and Unblock the Notifications
