திமுக கூட்டணிக்கு ஷாக்! ஜவாஹிருல்லா - கொங்கு ஈஸ்வரன் உள்பட 42 பேரின் கட்சிகள் அதிரடி ரத்து.. லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏவின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சி மற்றும் பாஜகவுடன் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 42 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில் அதன் முழுலிஸ்ட் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் அரசியல் கட்சிகளில் 2 வகைகள் உள்ளன. ஒன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள். இன்னொன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். அதிலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். அதில் 2 வகைகள் உள்ளன. ஒன்று தேசிய கட்சி. இன்னொன்று மாநில கட்சிகள்.

இதில் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஒரு கட்சி பெற வேண்டும் என்றால் அடுத்தடுத்து லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளுடன் 4 லோக்சபா எம்பிக்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 3 மாநிலங்களில் அங்குள்ள லோக்சபா தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 2 சதவீதம் வரை ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்க வேண்டும்.
அதேவேளையில் மாநில கட்சி அந்தஸ்தை பெற ஒரு கட்சி சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட மாநிலத்தில் 6 சதவீத ஓட்டு பெற்று 2 எம்எல்ஏக்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் லோக்சபா தேர்தலில் 6 சதவீத ஓட்டு பெற்று எம்பி வைத்திருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் சட்டசபை தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை பெற்றிருந்தால் அது மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும். அப்படி தேசிய கட்சி, மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டால் தனி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னம் கிடையாது. அவர்கள் எந்த தேர்தலில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒவ்வொரு முறை தேர்தலிலும் அவர்களுக்கு தனி சின்னம் வழங்கப்படும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் இருப்பின் ஒரே சின்னம் அடுத்தடுத்த தேர்தல்களில் கிடைக்கலாம். இல்லாவிட்டால் மாற்று சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை இருக்கும். நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற முடியாமல் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக ஏராளமான கட்சிகள் உள்ளன.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களின் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்ய வேண்டும். 6 ஆண்டுகளில் ஒருமுறையாவது தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் உள்பட சில விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால் பல கட்சிகள் அத்தகைய விஷயங்களை பின்பற்றுவது இல்லை. இப்படியான கட்சிகளை அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்வது உண்டு. அந்த வகையில் தான் நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 42 கட்சிகளும் அடங்கும். தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் பெயர் விவரங்கள் வருமாறு:
1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)
2 அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)
3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி
4. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
5. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்
6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி
7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்
8. அனைத்து மக்கள் நீதி கட்சி
9.அன்பு உதயம் கட்சி
10.அன்னை மக்கள் இயக்கம்
11. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி
12. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்
13. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்
14.எழுச்சி தேசம் கட்சி
15.கோகுல மக்கள் கட்சி
16. இந்திய லவ்வர்ஸ் கட்சி
17. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி
20. மக்கள் தேசிய கட்சி
21. மக்கள் கூட்டமைப்பு கட்சி
22. மக்களாட்சி முன்னேற்ற கழகம்
23. மனிதநேய ஜனநாயக கட்சி
24.மனிதநேய மக்கள் கட்சி
25.பச்சை தமிழகம் கட்சி
26. பெருந்தலைவர் மக்கள் கட்சி
27. சமத்துவ மக்கள் கழகம்
28.சிறுபான்மை மக்கள் நல கட்சி
29.சூப்பர் நேஷன் கட்சி
30. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்
31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்
32. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
33. தமிழர் தேசிய முன்னணி
34. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி
35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி
36.தமிழர் முன்னேற்ற கழகம்
37. தொழிலாளர் கட்சி
38. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
39. உரிமை மீட்பு கழகம்
40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி
41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்
42. விஜய பாரத மக்கள் கட்சி என மொத்தம் 42 கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் அதிகம். அதாவது
இதில் திமுக கூட்டணியில் உள்ள 2 கட்சிகளின் பதிவு ரத்தாகி உள்ளது. திருச்செங்கோடு எம்எல்ஏவாக கொங்கு ஈஸ்வரன் உள்ளார். இவர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் அவர் உதயசூரியனில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியானது, கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அந்த கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதேபோன்று ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் ரத்து செய்யப்பட்டது. இவர் பாஜக கூட்டணியில் உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதேபோல் 2016 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் இக்கட்சி போட்டியிடாத நிலையில் அவரது கட்சியின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications