“ரூ.5000 தேர்தல் நாடகம்.. ஸ்டாலின் வேண்டுமென்றே மத்திய அரசு மீது பழி போடுகிறார்” - தமிழிசை பதிலடி!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் மொத்தமாக ரூபாய் 5000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழிசை விமர்சித்துள்ளார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என இன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 பெண்களின் வங்கி கணக்கில் ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்... ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை... இது தர்மத்திற்கு எதிரானது.. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்காக மட்டுமே செய்கிறார்கள். ஏனென்றால்.. சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை... இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் திமுக.
இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்... அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை?... அதுவே மக்களை ஏமாற்றுவது தானே...
அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்? ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்... குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது... டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது.. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு.
எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள்.. ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால் அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது இங்கு அப்படி இல்லை... அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு உடனே அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது... ஆக இந்த திமுக அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல் தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது.... தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்ததாக வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும்.. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல ஏற்கனவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ஏற்கனவே உரிமைத் தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள் என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும்... முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது திட்டத்தை முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications