Election Exclusive: உடைய போகுது காங்கிரஸ்? எந்த பக்கம் இண்டிகேட்டர் போட்டாலும் சிக்கல் தான்! திரிசங்கு மனநிலையில் டெல்லி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அக்னி பரீட்சை தான். பல மாநிலத் தேர்தல்களில் தோற்ற காங்கிரஸ் தமிழ்நாடு தேர்தலை தான் நம்பி உள்ளது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணிக்கு சென்றால் விஜய் ஆதரவு தலைவர்கள் புதிய கட்சியை உருவாக்குவார்கள் என்கின்றனர். அதே நேரத்தில் விஜய் கூட்டணிக்கு சென்றால் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் இணைந்து புதிய கட்சியை உருவாக்கும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் தேர்தலை சந்திக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, தமிழக வெற்றி கழகம் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கூட்டணி குழப்பம்
இந்நிலையில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளின் பட்டியலை கட்சியின் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை எதிர்கால கூட்டணி முடிவில் முக்கிய பங்காற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விரைவில் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் அரசியல் கூட்டணி
அவர், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு நடைபெற்றால், தமிழக அரசியலில் புதிய அரசியல் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதற்கிடையில், கடந்த இரு தசாப்தங்களாக திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ், இம்முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதே இந்த கோரிக்கைக்கான அடிப்படையாகக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணி
தற்போதைய தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்ற நிலைப்பாடு கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று ஒரு பகுதி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர். மறுபுறம், அரசியல் மாற்றம் தேவை என்ற கருத்தில் உள்ள சில நிர்வாகிகள் தவெக கூட்டணியை ஆதரிக்கின்றனர் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் உட்கட்சி பிரச்சனை
காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், அதன் விளைவாக கட்சிக்குள் பிரிவு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. திமுக கூட்டணியில் இருந்து விலகினால், 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்ற சில தலைவர்கள் தனி அரசியல் கட்சியை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், திமுக கூட்டணியில் தொடர்ந்தால் மாற்றத்தை ஆதரிக்கும் குழுக்கள் தனித்த அரசியல் பாதையைத் தேர்வு செய்யக்கூடும் என்ற மதிப்பீடும் நிலவுகிறது.
2026 தமிழக தேர்தல்
தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு, எதிர்கால அரசியல் செல்வாக்கு ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு காங்கிரஸ் தனது அடுத்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் தலைமை அளவிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி அறிவிப்புகள், தமிழக காங்கிரஸின் அடுத்த கட்ட திசையை தீர்மானிக்கும் என்பதில் அரசியல் பார்வையாளர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். 2026 தேர்தலில் தமிழக காங்கிரஸ் வெற்றியை பெறுகிறதோ இல்லையோ? தேர்தல் வரை கட்சி இருக்குமா? என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications