Election Exclusive: ஹோம் தியேட்டரில்ல.. இனி ஹோமே தியேட்டராக போகுது! வீட்டுக்கொரு மெகா சைஸ் டிவி! ஸ்டாலின் போடும் ப்ளான்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை விட மிக அதிக திட்டங்களோடும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளோடும் திமுக எதிர்கொள்ள இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு வீட்டுக்கும் பிரம்மாண்ட எல்இடி டிவி அல்லது ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டமும், மகளிர் உரிமையை தொகையை உயர்த்தி வழங்கும் திட்டமும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மிகத் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தல் அறிக்கை போலவே, இந்த முறைவும் மக்கள் மனதை கவரும் வகையில் வாக்குறுதிகளை வடிவமைக்க கட்சி தலைமையகம் கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கனிமொழி எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் அனுபவம் கொண்ட நிர்வாகிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டவர்களும் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கை
இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வணிகர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மக்கள் பங்கேற்புடன் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'Manifesto 2026' என்ற பிரிவை தொடங்கியுள்ளது.
எதிர்கால தமிழ்நாடு
பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும் 'tnmanifesto.ai - எதிர்கால தமிழ்நாடு' என்ற ஏஐ தளத்தின் மூலம் கருத்துகள் பெறப்படுகின்றன. 2021 தேர்தலில் வெளியிடப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டதாக திமுக கூறுகிறது. சில வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிலுவையில் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. அந்த தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உதவித் தொகை
இந்த முறை பெண்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத் தரப்பினரைக் குறிவைத்து புதிய வாக்குறுதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போது வழங்கப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உதவித் தொகையை ரூ.2000 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இலவச எல்இடி டிவி திட்டம்
அதேபோல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச எல்.இ.டி. டிவி அல்லது ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது அதனை நவீன வடிவில், எல்.இ.டி. டிவி திட்டமாக மாற்றி மீண்டும் அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திராவிட மாடல் 2.0
இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும். இருப்பினும் 'திராவிட மாடல் 2.0' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, சமூகநீதியும் நலத்திட்டங்களும் இணைந்த புதிய வாக்குறுதிகளுடன் தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது என்று திமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications