Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. திமுகவும் கூட்டணி கட்சிகளை எப்படியாவது சமாளித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. அதே நேரத்தில் பெரும்பாலான கட்சிகள் அந்த கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமலஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டார். ஒரு காலத்தில் வைகோவும் இதே போல் தான் ஒரு முடிவை எடுத்திருந்தார். இந்த நிலையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஹீரோவாக நடித்த கமலஹாசனுக்கு ஒரு சீட்டு கூட இல்லை.. ஆனால் காமெடியனாக நடித்த கருணாஸ் ஒரு சீட்டை வென்றுவிட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, குறிப்பாக ஆளும் திமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சமாளித்து வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் கூட்டணிக்குள் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மநீம தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டசபை தேர்தல்
ஒரு காலத்தில் வைகோ எடுத்த முடிவை நினைவூட்டும் வகையில் இந்த முடிவு பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஹீரோவாக நடித்த கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அதே படத்தில் காமெடியனாக நடித்த கருணாஸ் ஒரு சீட்டை வென்றுள்ளார் என கிண்டல் செய்கின்றனர்.
கமல்ஹாசன்
அரசியலில் சில நேரங்களில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் வரலாற்றி மாறாத சோக வடுவாக மாறிவிடும். அது அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களின் முடிவாகக் கூட இருக்கும். அப்படி ஒரு முடிவைத் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம்
கடந்த 2018ஆம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் பங்கேற்றது, வீடியோவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்தியது குறிப்பிடட்தக்கது. இதனைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது. வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றது. அந்த நம்பிக்கையில் 2021 சட்டசபை தேர்தலில் சரத்குமாரின் சமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது மநீம.
திமுக கூட்டணி
அப்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். அதற்கு பிறகு காலங்கள் மாறியது காட்சிகளும் மாறியது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியை விமர்சித்து கமல் கட்சி ஆரம்பித்தாரோ, அதே திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அப்போது தொகுதி வழங்கப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
நிபந்தனையற்ற ஆதரவு
பின்னர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் தொகுதி எண்ணிக்கை மற்றும் சின்னம் தொடர்பான விவாதங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் பின்னர், இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடாது என்றும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார். இது தியாகம் அல்ல கடமை என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ம.தி.மு.க
இதேபோல் ஒரு முடிவைத் தான் 2011 சட்டசபை தேர்தலுக்கு முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் எடுத்திருந்தார். கடந்த 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகள் பெற்ற ம.தி.மு.க., 2011 தேர்தலில் அதே அளவிலான முக்கியத்துவத்தை எதிர்பார்த்தது. ஆனால் குறைந்த தொகுதிகள் வழங்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தி, அந்த தேர்தலை புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார்.
வைகோ - கம்ல்ஹாசன்
அந்த முடிவு அப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று வைகோ எடுத்த கடுமையான முடிவை நினைவூட்டும் வகையில் இன்று கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு பார்க்கப்படுகிறது. ஆனால் வைகோ போல முழுமையாக புறக்கணிக்காமல், கூட்டணிக்கு தனது ஆதரவை தொடர்ந்திருப்பது மட்டும் அரங்கேறியுள்ளது. கமல்ஹாசனின் இந்த முடிவு மக்கள் நீதி மய்யத்தின் எதிர்கால அரசியல் பாதையை எவ்வாறு மாற்றும்? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications
