’அப்பா’ செல்லமான ‘அம்மா’ பிள்ளை.. திமுக பக்கம் ஓ.பன்னீர்செல்வம்! உச்சகட்ட கோபத்தில் அடிவருடிகள்?
சென்னை: தமிழக அரசியல் சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கை மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்டுள்ளார் என்ற நிலை உருவான நிலையில், அவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அம்மாவின் ( ஜெயலலிதா) விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் அப்பா ( ஸ்டாலின்) பக்கம் செல்வது உறுதி என்கின்றனர் திமுகவினர். இதனால் அவரது ஆதரவாளர்கள் பலர் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்குள் மட்டுமல்ல, கூட்டணி வட்டாரங்களிலும் பரபரப்பான நகர்வுகள், யூகங்கள், பூச்சாண்டி அரசியல் என பல்வேறு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்பான அரசியல் யூகங்கள் தற்போது மீண்டும் தீவிரமாக பேசப்படுகின்றன. அதிமுகவில் இருந்தும், பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தான் அது.

ஓ பன்னீர்செல்வம்
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் சேர முயற்சித்த நிலையில் அதற்கான நேரம் கைகூடி வரவில்லை. இதை அடுத்து விஜய் உடன் கூட்டணி சேரப் போகிறேன் என மிரட்டினார் ஓபிஎஸ். இருந்த போதும் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்ப்பு காரணமாக ஓ பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க பாஜக தயங்கியது. இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி சேர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக சில நிகழ்வுகள் சமீபத்தில் நடந்தது.
திமுக ஆதரவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்துக்கு பின்னரும் முன்னரும் பல சம்பவங்கள் நடந்தது. பேரவையில் பேசும்போது, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் சூழல் உள்ளது என்றும், மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் அவர் மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஸ்டாலின் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி வாழ்த்து தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு நடந்ததாக விளக்கமளித்தார். ஆட்சியின் செயல்பாடு நல்லதாக இருந்ததால் மீண்டும் அதே ஆட்சி திரும்பும் சூழல் மாநிலத்தில் காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
திமுகவில் ஐக்கியம்
அதே நேரத்தில், அவரது ஆதரவு எம்எல்ஏ பேரவையில் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, மக்கள் மனதில் இருப்பதையே அவர் வெளிப்படுத்தியதாக ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார். திமுகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல், "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார். இந்த பதில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அவரால் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
ஜெயலலிதா
மூன்று முறை அந்தப் பதவியை வகித்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலகிய நிலை உருவானது. கட்சியில் மீண்டும் இணைய பலமுறை முயன்றும் அது சாத்தியமாகவில்லை. பின்னர் தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்யாமல், உரிமை மீட்பு என்ற பெயரில் அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.
ஆனால் காலப்போக்கில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு அரசியல் அணிகளுடன் இணைந்தனர்.
தமிழக அரசியல் மாற்றம்
தற்போது அவருடன் இருப்போர் குறைந்துள்ளனர். இந்தச் சூழலில் அரசியல் தளத்தில் தனித்து நிற்கிறார் என்ற மதிப்பீடு உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் திமுக தலைமையைச் சந்தித்திருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கிடையில், அவர் எடுத்துள்ள இந்த அணுகுமுறை எதிர்கால அரசியல் முடிவுகளுக்கு முன்னோட்டமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எந்த பாதையைத் தேர்வு செய்கிறார் என்பது தமிழக அரசியல் சூழலில் தொடர்ந்து கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications